சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப்பை இடமாற்றம் செய்யக் கூடாது: கொலிஜியத்துக்கு 237 வழக்கறிஞர்கள் கடிதம்

புதுடெல்லி: ‘சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியின் பணி இடமாற்ற பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும்படி, உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு 237 வழக்கறிஞர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மாற்றம் செய்யும்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், சஞ்சீப் பானர்ஜியின் மாற்றத்தை மறுபரிசீலனை செய்யும்படி, கொலிஜியத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற   வழக்கறிஞர்கள் 237 பேர் கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:துணிச்சல் மிக்க, சிறந்த ஆளுமை மிகுந்த ஒரு தலைமை நீதிபதியை சிறிய உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யும்போது, அதன் நோக்கத்தை அறிந்து கொள்ள நீதித்துறையின் அங்கமான வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது. அதன்படி, 75 நீதிபகள் கொண்ட ஒரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை, மிகச்சிறிய மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சென்னையில் இவர் பொறுப்பேற்று 10 மாதங்களே ஆன நிலையில், இந்த பணியிட மாற்றம் நடப்பதால், வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இதுபோன்ற திடீர் பணியிட மாற்றம் ஒரு நேர்மையான நீதிபதி மீதான நன்மதிப்பை பொதுவெளியில் குறைக்க வழிவகை செய்கிறது. குறுகிய காலத்தில் அடிக்கடி தலைமை நீதிபதியை மாற்றுவது உயர் நீதிமன்ற செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். பல்வேறு முடிவுவகளையும் அது தாமதபடுத்தும். இந்த மாற்றங்கள் குறித்து கொலிஜியம் கடந்த செப்டம்பர் 16ம் தேதி முடிவெடுத்து, அதை தாமதமாக நவம்பரில் அறிவித்து இருப்பது, கொலிஜியத்தின் வெளிப்படை தன்மை, முடிவுகள் மீது கேள்விகள் எழுகிறது.

பாகுபாடுமின்றி துணிச்சலாக செயல்படும்  நீதிபதியை மாற்றுவது அல்லது முக்கியத்துவம் இல்லாத இடத்துக்கு மாற்றுவது ‘எமர்ஜன்சி’ காலத்தில் மட்டுமே நடந்தவை. எனவே, சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றும் பரிந்துரையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: