கேரளாவை மிரட்டும் புதிய நோரோ வைரஸ்: மாணவர்கள் பாதிப்பு

புதுடெல்லி: சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், இந்தியாவில் முதன் முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த மாநிலத்தில் மட்டுமே புதுப்புது வைரஸ்கள் தாக்கி வருகின்றன. ஜிகா வைரஸ் தாக்குதலும் இங்கிருந்து தான் தொடங்கியது. தற்போது, இந்த வைரஸ் உத்தர பிரதேசத்தை மிரட்டி கொண்டிருக்கிறது. இந்நிலையில், கேரளாவில் தற்போது புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. வயநாடு மாவட்டத்தில், ‘நோரோ வைரஸ்’ என்ற வைரசின் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள கால்நடை மருத்துவ கல்லூரியின் விடுதியில் தங்கி படிக்கும் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்த வைரசால் பாதித்துள்ளனர்.

வாந்தி, வயிற்றுப் போக்கு இவற்றின் அறிகுறிகளாக உள்ளன. இது தொடர்பாக மாநில சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ”வயநாடு மாவட்டத்தில் நோரோ பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தண்ணீர் மூலம் பரவுவதால், குடிநீர் ஆதாரங்கள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்ய  வேண்டும்,” என்றார். அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலமாக நோரோ வைரஸ் பரவுகிறது.

Related Stories: