ராணுவ பள்ளியில் 147 பேர் படுகொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவது ஏன்? இம்ரான்கானிடம் பாக். உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் 147 பேரை தீவிரவாதிகள் கொன்ற வழக்கில், பிரதமர் இம்ரான்கான் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளி மீது, கடந்த 2014ம் ஆண்டு டெஹ்ரிக்-ஐ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 147 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 20ம் தேதி தீர்ப்பை வழங்கியது. ஆனால், அந்த தீர்ப்பின் மீது பாகிஸ்தான் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பிரதமர் இம்ரான்கான் உச்ச நீதிமன்ற, தலைமை நீதிபதி குல்சார் அகமது தலைமையிலான அமர்வில்  நேற்று இம்ரான்கான் ஆஜரானார்.

அப்போது, ‘ராணுவ பள்ளி மீதான தாக்குதலில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் அரசிடம் நஷ்டஈடு கேட்கவில்லை. அந்த நாளில் பாதுகாப்பு அமைப்பு எங்கே போனது என்றுதான் கேட்கிறார்கள்?’ என்று நீதிபதிகள் கேட்டனர். இதற்கு பிரதமர் இம்ரான்கான், ‘இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது,’ என்று பதிலளித்தார். அதற்கு நீதிபதிகள், ‘மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்... நாங்கள் ஏற்கனவே விசாரணை குழு அமைத்து விட்டோம். சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் முடிந்தும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? அக்டோபர் 20ம் தேதி நாங்கள் பிறப்பித்த உத்தரவில், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். பாகிஸ்தான் சிறிய நாடு கிடையாது. 6வது பெரிய ராணுவ அமைப்பை கொண்டது. இந்த தாக்குதலில் தொடர்புடையவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிய வந்துள்ளது. அது ஏன் என்று பிரதமராகிய நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்,’ என்று ஆவேசமாக கூறினர்.

* 2 மணி நேரம் லேட்

‘பிரதமர் இம்ரான்கான் இந்த வழக்கில் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்,’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால், இம்ரான்கான் 2 மணி நேரம் தாமதமாக 12 மணிக்கு தான் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

Related Stories: