லக்கிம்பூர் வன்முறை அமைச்சர் மகன் துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியானது: தடயவியல் அறிக்கை தகவல்

லக்கிம்பூர்: லக்கிம்பூர் கேரி வன்முறையில் அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளியானதை தடயவியல் ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்திப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கார் மோதியதில் 4 விவசாயிகள் இறந்தனர். இந்த வன்முறையின் போது ஆஷிஸ் மிஸ்ரா துப்பாக்கியால் சுட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் வெடித்த வன்முறையில் பத்திரிகையாளர் ஒருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஆஷிஸ், அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மீது கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் வழக்கின் விசாரணையை கண்காணிப்பது குறித்து ஆலோசிப்பதாக தெரிவித்தது. இவ்வழக்கில், ஆஷிஸ் மிஸ்ரா, அவரது நண்பர் அங்கித் மிஸ்ராவின் உரிமம் பெற்ற துப்பாக்கி உள்பட 4 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தடயவியல் ஆய்வகம் நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆஷிஸ் மிஸ்ரா, முன்னாள் ஒன்றிய அமைச்சர் அகிலேஷ் தாஸின் மருமகன் அங்கித் மிஸ்ரா, பாதுகாவலர் லத்தீப் வைத்திருந்த ரிப்பீட்டர் துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் சுடப்பட்டதை உறுதி செய்துள்ளது. இந்த அறிக்கையானது உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஆனால், இறந்த 8 பேரின் உடலிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று உடற்கூறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தடய அறிவியல் அறிக்கையால், தனது மகன் வன்முறை நிகழ்ந்த இடத்தில் இல்லை எனக் கூறி வந்த அமைச்சருக்கும் அவரது மகனுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

பாக்ஸ் இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``நான்காவது துப்பாக்கி தொடர்பான ஆய்வக முடிவுகள் இதுவரை வெளியாகவில்லை. 3 துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சுடப்பட்டது உறுதியாகி இருந்தாலும், அது எந்த தேதியில் வெளியானது என்பது ஆய்வக முடிவில் தெரியவில்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தகுந்த ஆதாரத்துடன் தோட்டாக்கள் அக்டோபர் 3ம் தேதி சுடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,’’ என்றார்.

Related Stories: