இந்திய தடுப்பூசி சான்றுக்கு 96 நாடுகளில் அங்கீகாரம்: ஒன்றிய சுகாதார அமைச்சர் தகவல்

புதுடெல்லி: `இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் ஏற்றுக் கொள்வதாக 96 நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன,’ என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி 16ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்கத்தில், கொரோனா ஒழிப்பு, தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த முன்களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த இத்திட்டம், பின்னர் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 18 வயதுடையோர் என இத்திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. தற்போது, குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது பற்றி ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கோவாக்சின் தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டிற்கு கடந்த 3ம் தேதி உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்தது. இது குறித்து நேற்று அவர் அளித்த பேட்டியில், `தற்போது 96 நாடுகள் இந்திய கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளன. தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள், உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகளை 2 டோஸ் செலுத்திக் கொண்ட பயணிகள் கொண்டு வரும் இந்திய சான்றிதழ்களை ஏற்றுக் கொள்வதாக 96 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளன,’’ என்று கூறினார்.

Related Stories: