சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவர்களுக்கு கவுன்சிலிங்-எஸ்பி வழங்கினார்

சித்தூர் :  சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதானவர்களுக்கு எஸ்பி செந்தில்குமார் கவுன்சிலிங் வழங்கினார். சித்தூர் முதலாவது காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்த 136 பேருக்கு கவுன்சிலிங் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், எஸ்பி செந்தில்குமார் கலந்து கொண்டு கவுன்சிலிங் வழங்கினார்.

இதையடுத்து, அவர் கூறியதாவது: சித்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கஞ்சா, மது பாட்டில்கள் கடத்தி விற்பனை செய்தல் உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளி வந்த 136 பேருக்கு மீண்டும் இதுபோன்ற தவறு செய்யக் கூடாது என கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மேலும், அவர்களிடம் ஒரு முறை தவறு செய்தால் மன்னிப்பு வழங்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டு அனுப்பப்படும்.

ஆனால் மீண்டும் 2வது முறை தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மீண்டும் மீண்டும் தவறு செய்தால் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.   இதனால், சிறையில் இருந்து எளிதில் வெளியே வர முடியாது. எனவே இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். அரசுக்கு எதிரான இத்தகை செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இவர்களில் பலர் பணத்திற்கு ஆசைப்பட்டு இது போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டது.  

கல்லூரி, பள்ளிகளில் கஞ்சா விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் யாருக்காவது தெரிய வந்தால் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் நகர டிஎஸ்பி சுதாகர், இன்ஸ்பெக்டர் நரசிம்மா ராஜூ உட்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: