2020ல் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி: தமிழக சமூக சேவகர் கிருஷ்ணம்மாளுக்கு பத்மபூஷண்

புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கவுரவித்தார். தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள், விளையாட்டு வீராங்கனைகள் பி.வி.சிந்து, மேரி கோம், ராணி ராம்பால் ஆகியோர் விருதை பெற்றனர். கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். பின்னர், டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டு 141 பேருக்கும், 2021ம் ஆண்டில் 119 பேருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2020, 2021ல் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சி 2 கட்டமாக ஜனாதிபதி மாளிகையில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 2020ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார். மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், கர்நாடகத்திலுள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதி விஸ்வேஷ தீர்த்த சுவாமிகள், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் சார்பில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

மறைந்த கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து உள்ளிட்டோருக்கு பத்மபூஷண் விருதும், இந்திய ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், நடிகை கங்கனா ரனாவத், பாலிவுட் பட இயக்குநர் கரண் ஜோஹர், பாடகர் அட்னான் சமி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. தமிழகத்தில் நிலமில்லா ஏழைகளுக்குப் பூமிதான இயக்கத்தின் மூலம் நிலம் வழங்க பாடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பத்மபூஷண் விருதை பெற்றார்.

நேற்றைய நிகழ்ச்சியில் 73 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இன்று நடக்கும் விழாவில் 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு பத்ம விபூஷண் விருதும், சாலமன் பாப்பையா உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.

Related Stories: