உபா சட்டத்தில் 102 பேர் கைது உண்மையை ஊமையாக்க முடியாது: ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: திரிபுராவில் 102 பேரை உபா சட்டத்தில் கைது செய்திருப்பதன் மூலம் அரசு உண்மையை ஊமையாக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, கோயில்கள் இடிக்கப்பட்டதை கண்டித்து திரிபுராவின் பனிசாகரில் விஸ்வ இந்து பரிஷத் கடந்த 26ம் தேதி நடத்திய பேரணியில் மசூதிக்கு தீ வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இவை போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று மாநில அரசு கடந்த 29ம் தேதி தெரிவித்தது. இதற்கிடையே, இது தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில் வீடியோ பதிவை வெளியிட்டதாக கூறி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் 4 பேர் மீது அசாம் மாநில போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இதைத் தொடர்ந்து, திரிபுரா வன்முறை தொடர்பாக  கருத்துகளை பதிவு செய்ததற்காக பத்திரிக்கையாளர்கள் உட்பட 102 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது. மேலும் இவர்களது டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் தளங்களை முடக்கும்படி அந்நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில், ``திரிபுரா பற்றி எரிகிறது என்பது சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கான அறை கூவல். ஆனால், பாஜ தனக்கு சாதகமாக சமூக வலைதள ஆர்வலர்களை கைது செய்து உண்மையை மூடி மறைக்க பார்க்கிறது. அரசு உண்மையை ஊமையாக்க முடியாது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: