இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ‘பாக். ஜிந்தாபாத்’ ஸ்டேட்டஸ் போட்ட மனைவி மீது வழக்கு: கணவன் கொடுத்த புகாரால் நடவடிக்கை

லக்னோ: டி-20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதால் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த அக். 24ம் தேதி நடைபெற்ற டி20 உலகக் கோப்பை சூப்பர் - 12 சுற்றில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை முதன்முறையாக பாகிஸ்தான் வீழ்த்தியது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்த இஷா மியா என்பவர் தனது மனைவி ரபியா சம்ஷி என்பவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து இஷான் மியா கூறுகையில், ‘பாகிஸ்தான் அணி வெற்றியடைந்ததை அடுத்து, எனது  மனைவி ரபியா சம்சி அவது மொபைல் போனில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்  போட்டார். அவர் இந்திய கிரிக்கெட் வீரர்களை இழிவுபடுத்தும் பதிவையும்  போட்டார். என் மனைவியின் பதிவை பார்த்து, என்னுடன் பணியாற்றும் சக  தொழிலாளர்கள் என்னை சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். மனைவியின்  செயலால் நான் மிகவும் அவமானப்பட்டதாக உணர்ந்தேன். அதனால், அவர் மீது  போலீசில் புகார் செய்தேன். பாகிஸ்தான் அணி வெற்றிப் பெற்றதற்காக ரபியாவின் குடும்பம் பட்டாசு வெடித்தும் கொண்டாடியது’ என்றார்.

போலீசாரின் விசாரணையில், தம்பதியினருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் திருமணம்  நடந்ததாகவும், தற்போது இருவரும் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. ரபியா தனது பெற்றோரின் வீட்டில் தற்போது உள்ளார். அவர் ஏற்கெனவே தனது கணவர் மியா மீது வரதட்சணை  கேட்டதாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதற்காக‌ மனைவியின் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராம்பூர் மாவட்டம் கஞ்ச் கூடுதல் எஸ்பி சன்சார் சிங் கூறுகையில், ‘இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153-A மற்றும் தகவல் தொழில்நுட்ப (திருத்தம்) சட்டம், 2008-இன் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் ரபியா சம்சி மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

Related Stories: