திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டாற்று வெள்ளம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப்பகுதியில் யாரேனும் உள்ளனரா என திருவில்லிபுத்தூர் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழி அடுக்கு சுழற்சி வடகிழக்கு பருவமழை ஆகியவை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களாக திருவில்லிபுத்தூர் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. 3 மணிக்கு துவங்கிய மழை மாலை 6 மணி வரை விடாமல் பெய்தது. மலைப்பகுதியில் மட்டும் பெய்த மழையினால் சிறிது நேரத்திற்கெல்லாம் மலை அடிவாரத்தில் உள்ள ஓடைகளில் செம்மண் நிறத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மலை அடிவார பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டியது.

ஓடைகளில் வெள்ளை வருவதை கண்ட அடிவாரத்தில் உள்ள விவசாயிகள், கோயிலுக்கு சென்றவர்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இந்நிலையில் செண்பக தோப்பு பகுதியையும், மம்சாபுரம் பகுதியையும் இணைக்கும் அத்தி துண்டு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கியது. அதுபோல் செண்பகத்தோப்பு மம்சாபுரம் சாலையிலுள்ள வனத்துறையின் செக் போஸ்டை வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கனவே இடியும் நிலையில் உள்ள இந்த செக்போஸ்ட் காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.இதனால் நேற்று சோதனை சாவடியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் உடனடியாக வெளியேறி சென்றனர்.

பொதுவாக விடுமுறை நாட்களில் திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்து திரும்பி வருவது வழக்கம். அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளதால் யாராவது பொதுமக்கள் செண்பகத்தோப்பு பகுதிக்கு சென்று உள்ளார்களா என்பது குறித்து வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: