விவசாயிகள் தாக்குதல் பாஜ எம்பி.யின் கார் கண்ணாடி உடைப்பு

சண்டிகர்: அரியானாவில் விவசாயிகள் போராட்டத்தின் போது அந்த வழியாக சென்ற பாஜ எம்பி.யின் கார் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அரியானாவில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆளும் பாஜ மற்றும் ஜனநாயக ஜனதா கட்சி உள்ளிட்டவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இம்மாநில பாஜ எம்பி ராம் சந்தர் ஜாங்ரா, நர்வானா மற்றும் உச்சானா பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றார்.

அவர் செல்லும் வழியில் விவசாயிகள் கருப்புக்கொடி காட்டுவதற்காக திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, அந்த வழியாக எம்பி.யின் கார் சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென சிலர் எம்பி.யின் கார் மீது தடிகளை வீசினார்கள். இதில் கார் கண்ணாடி சேதமடைந்தது. எம்பி காரின் பின் இருக்கையில் அமர்ந்தார். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, 2 பேரை கைது செய்துள்ளனர்.

Related Stories: