கொசஸ்தலையாற்றின் குறுக்கே மேலானூர் - மெய்யூர் சாலை தரைபாலத்தில் பாதிப்படைந்த பகுதிகளை அமைச்சர் நாசர் ஆய்வு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை வட்டம், கொசஸ்தலையாற்றின் குறுக்கே மேலானூர் - மெய்யூர் சாலையில் உள்ள தற்காலிக தரைபாலத்தில் பாதிப்படைந்த பகுதிகளையும், அதனை சீர்செய்யும் பணிகளையும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, பருவ மழை காலத்தை முன்னிட்டு, தமிழக முழுவதும் ஏற்படுகின்ற இயற்கை சீற்றத்தையும், சேதரத்தையும் முன்கூட்டியே ஆய்வு செய்து அதற்கேற்றார் போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுவரையில் பூண்டி நீர்தேக்கத்திலிருந்து விநாடிக்கு சுமார் 1900 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட காரணத்தால் கொசஸ்தலையாற்றின் குறுக்கே உள்ள மேலானூர் -  மெய்யூர் சாலையில் உள்ள தற்காலிக தரைபாலம் சேதமடைந்தது. இதனை உடனடியாக சீர் செய்யும் பணிகள் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் பூண்டி நீர்தேக்கத்திலிருந்து, விநாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்ற வருகிறது. ஆகவே சேதமடைந்த தரைபாலத்தை விரைவில் செப்பன்னிட்டு மக்கள் பயன்பட்டிற்கு கொண்டு வர போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பகுதியில் உள்ள உயர்மட்ட பாலத்தை சுமார் ரூ. 14.95 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்க கடந்த ஆட்சி காலத்தில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை 20 சதவீதம் பணிகள் கூட நிறைவடையாமல் உள்ளது. எனவே விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, எந்தவித இடர்பாடுகளையும் எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதனைதொடர்ந்து, பூண்டி நீர்த்தேக்கத்தில் உள்ள நீரின் இருப்பு நிலை குறித்தும் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆய்வு செய்து பொதுபணித்துறை, வருவாய்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கோட்டாட்சியர் ரமேஷ், பொது பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.கார்திகேயன், கிராம சாலைகள் பிரிவு உதவி கோட்டப் பொறியாளர் இளங்கோ, பூண்டி நீர்தேக்க உதவி பொறியாளர் ரமேஷ், வட்டாட்சியர்கள் திருவள்ளுர் ஏ.செந்தில்குமார், ஊத்துக்கோட்டை ராமன்உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* தரைப்பாலம் துண்டிப்பு

ஆந்திரா மாநிலம் அம்மபள்ளியில் இருந்து மழையின் நீர்வரத்து காரணமாகவும், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை  சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை காரணமாகவும் பூண்டி சத்தியமூர்த்தி அணைக்கு வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் வரத்து வருவதால் அணையின் முழு  கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2,815 மில்லியன் கன அடி  தண்ணீர் இருப்பு உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம்  அணையிலிருந்து 2,000 கன அடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று காலை வினாடிக்கு 1000 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.  இதனால், கொசஸ்தலை ஆற்றின் வழித்தடமான மெய்யூர் பகுதியில் உள்ள தரைப்பாலம்  உபரி நீர் கரைப்புரண்டு ஓடியதால் துண்டிக்கப்பட்டது.

Related Stories: