சீனா அருகே உள்ள கடைகோடி கிராமத்தில் 4ஜி மொபைல் சேவை: கடல் மட்டத்தில் இருந்து 13,000 அடி உயரம்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக்கில் லே பகுதியில் உள்ளது டெம்சோக் கிராமம். இது, சீனா உடனான நமது நாட்டின் கடைக்கோடி எல்லையாகும். இது, கடல் மட்டத்தில் இருந்து 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதனால், இங்கு மொபைல் இணைப்பு வழங்குவது மிகவும் சிக்கல் நிறைந்ததாக இருந்து வந்தது. இந்நிலையில், லே தொகுதியின் எம்பி ஜம்யாங் ஷெரிங் நம்கியால், டெம்சோக்கில் 4ஜி மொபைல் இணைய சேவையை நேற்றுத் தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், `டெம்சோக்கில் ஜியோ மொபைல் கோபுரத்தை துவக்கி வைத்து எல்லைப் பகுதி கிராம மக்கள், ராணுவத்தினர், இந்தோ-திபெத் எல்லை படை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு 4ஜி இணைய சேவையை அர்ப்பணித்துள்ளேன். இதன் மூலம், பாங்காக், சுஷுல், சகா வழியாக ரிஜாங் லா வரையிலான பகுதி மக்கள் பயன் பெறுவார்கள்,’ என்று கூறியுள்ளார். இது தவிர, லடாக்கில் உள்ள எல்லை கிராமங்களான நியோமா தாருக், துர்புக் பகுதிகளிலும் 4 ஜி இணைய சேவையை ஜியோ நிறுவனம் முதல் நிறுவனமான வழங்க தொடங்கியுள்ளது.

Related Stories: