குமரி மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ ஆற்றங்கரை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை: 16 வீடுகள் இடிந்தன

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்த நிலையில் ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் முதல் ‘ரெட் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்று பகல் பொழுது முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தவண்ணம் இருந்தது. தொடர் மழையை தொடர்ந்து மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் அரவிந்த் உத்தரவு பிறப்பித்திருந்தார். கல்லூரிகள் வழக்கம்போல்  செயல்பட்டது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் ரப்பர் பால்வெட்டு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. உப்பள தொழில் முடங்கியுள்ளது.

மலையோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. ஏற்கனவே விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து வடிந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்வது விவசாயிகளையும் கவலைகொள்ள செய்துள்ளது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக கன்னிமாரில் 95.4 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.62 அடியாகும். அணைக்கு 1360 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 1635 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 72.51 அடியாக உள்ளது. அணைக்கு 1093 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 16.20 அடியாக நீர்மட்டம் இருந்தது. 302 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-2ல் 16.30 அடியாக நீர்மட்டம் இருந்தது. 45 கனஅடியாக நீர்வரத்து காணப்பட்டது. பொய்கையில் 40.60 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 47.57 அடியும், முக்கடல் அணையில் 25 அடியும் நீர்மட்டம் உள்ளது.

மழைநீடித்து வந்த நிலையில் கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ பிறப்பிக்கப்பட்டிருந்து. நேற்று மதியம் 1.35 மணி முதல் அது ‘ரெட் அலர்ட்’ ஆக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விஏஓக்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு காவல்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். மருத்துவ குழுவும் தயார்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அந்தந்த துறைகளை கண்காணித்து பணிகளை ஒருங்கிணைத்து நிலைமைகள் குறித்த தகவல்களை சேகரித்து சென்னையில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டு  அறைக்கு அனுப்பி வருகின்றனர்.

 அணைகள் அனைத்தும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அணைகளின் நீர்மட்டம், மழையளவு சேகரிக்கப்படுகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று மாலை வரை மலையோர பகுதிகளில் பெரிய அளவு மழை பதிவாகவில்லை. அணைக்கு வருகின்ற தண்ணீரின் அளவை விட கூடுதல் அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று  காலை வரை தோவாளை, திருவட்டார் தாலுகாக்களில் தலா ஒரு வீடுகள் இடிந்து  விழுந்தன. நேற்று மாலை நிலவரப்படி கல்குளம்-1, அகஸ்தீஸ்வரம்-1, திருவட்டார்  2, விளவங்கோடு 2, தோவாளை 8 வீடுகள் என்று 14 வீடுகள் இடிந்து  விழுந்துள்ளன. தோவாளை சானலில் காட்டுப்புதூர் பகுதியில் உள்ள பழைய பாலம் பகுதியில் லேசான உடைப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய பாலம் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருவதால் மக்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படவில்லை. ரெட் அலர்ட் பிறப்பித்துள்ள போதிலும் மழை குறைவாக இருப்பதால் தேசிய பேரிடர் மீட்பு படை வரவழைக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு பலகைகள் எஸ்.டி.மங்காடு உட்பட குழித்துறை தாமிரபரணி ஆறு பாயும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: