இலங்கைக்கு எதிராக போராடி வென்றது தென் ஆப்ரிக்கா

ஷார்ஜா: இலங்கை அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், கடுமையாகப் போராடிய தென் ஆப்ரிக்கா கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. பதும் நிசங்கா, குசால் பெரேரா இருவரும் இலங்கை இன்னிங்சை தொடங்கினர். குசால் 7 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். நிசங்கா - அசலங்கா ஜோடி 2வது விக்கெட்டுக்கு 41 ரன் சேர்த்தது. அதிரடி காட்டிய அசலங்கா 21 ரன் (14 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார்.

அடுத்து வந்த ராஜபக்ச டக் அவுட்டாகி வெளியேற, அவிஷ்கா 3, ஹசரங்கா 4 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஒரு முனையில் அபாரமாக விளையாடிய  நிசங்கா 46 பந்தில் அரை சதம் அடித்தார். கேப்டன் ஷனகா 11, கருணரத்னே 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். நிசங்கா 72 ரன் (58 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பிரிடோரியஸ் பந்துவீச்சில் அன்ரிச் வசம் பிடிபட்டார். துஷ்மந்த சமீரா 3 ரன் எடுத்து அன்ரிச் வேகத்தில் கிளீன் போல்டானார். கடைசி பந்தில் லாகிரு குமாரா (0) ரன் அவுட்டானார். இலங்கை அணி 20 ஓவரில் 142 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தீக்‌ஷனா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ஷம்சி (4-0-17-3), பிரிடோரியஸ் தலா 3, அன்ரிச் நார்ட்ஜ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் 11, டி காக் 12 ரன் எடுத்து துஷ்மந்த சமீரா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். வாண்டெர் டுஸன் 16 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கேப்டன் தெம்பா பவுமா - மார்க்ரம் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தனர். மார்க்ரம் 19 ரன், பவுமா 46 ரன் எடுத்து (46 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஹசரங்கா வீசிய 18வது ஓவரில் டிசில்வா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஏற்கனவே 15வது ஓவரின் கடைசி பந்தில் ஹசரங்கா விக்கெட் வீழ்த்தியிருந்ததால், அவர் ‘ஹாட்ரிக்’ சாதனையை வசமாக்கினார்.

தென் ஆப்ரிக்கா 17.2 ஓவரில் 112 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பானது. லாகிரு குமாரா வீசிய அந்த ஓவரில் மில்லர் 2 சிக்சர்களையும், ரபாடா 1 பவுண்டரியையும் விளாசி அசத்தினர். தென் ஆப்ரிக்கா 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. மில்லர் 23 ரன் (13 பந்து, 2 சிக்சர்), ரபாடா 13 ரன்னுடன் (7 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை பந்துவீச்சில் ஹசரங்கா 3, துஷ்மந்தா 2 விக்கெட் வீழ்த்தினர். ஷம்சி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories: