ஜம்பா அற்புதமாக பந்துவீசினார்: கேப்டன் ஆரோன் பிஞ்ச் பாராட்டு

துபாய்: ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்றிரவு நடந்த 22வது லீக் போட்டியில் சூப்பர் 12 குரூப் 1 பிரிவில் இலங்கை-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் எடுத்தது. குசால் பெரோரா, சரித் அசலங்கா தலா 35, பானுகா ராஜபக்சே நாட் அவுட்டாக 33 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஆடம் ஜம்பா, ஸ்டார்க், கம்மின்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டேவிட் வார்னர் 65(42பந்து), கேப்டன் பிஞ்ச் 37, மேக்ஸ்வெல் 5 ரன்னில் ஆட்டம் இழந்தனர். ஸ்மித் 28, ஸ்டோனிஸ் 16 ரன்னில் களத்தில் இருந்தனர். முதல் போட்டியில்  தென்ஆப்ரிக்காவை வீழ்த்திய ஆஸ்திரேலியாவுக்கு இது 2வது வெற்றியாகும். 4 ஓவரில் 12 ரன் மட்டுமே கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய ஆடம் ஜம்பா ஆட்டநாயகன் விருது பெற்றார். வெற்றிக்கு பின் ஆஸி. கேப்டன் ஆரோன் பிஞ்ச் கூறுகையில், ``இது ஒரு நல்ல ஆட்டம்.

இலங்கை அணியினர் அதிரடியாக ஆடிய நேரத்தில் ஜம்பா விக்கெட் எடுத்து நெருக்கடி அளித்தார். பின்னர் ஸ்டார்க் 2 ஓவர் வீசி உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தினார். பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. அதனால் சேசிங் நன்றாக இருந்தது. ஸ்பின்னர்கள் வருவதற்கு முன் நல்ல ஸ்கோர் அடிக்க வேண்டும் என நினைத்தோம். ஜம்பா அற்புதமாக பந்து வீசினார். பெரிய விக்கெட்டுகளை எடுத்தார். இது அவரது உலகத்தரம் வாய்ந்த ஆட்டமாகும். வார்னர் அழகான இன்னிங்ஸ் ஆடினார். ஒரு பேட்ஸ்மேனாக அவர் பார்முக்கு திரும்புவதை விரும்புகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி எப்போதும் பெரிய போர். நாங்கள் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம், என்றார்.

30 ரன் குறைவாக எடுத்துவிட்டோம்

இலங்கை கேப்டன் ஷனாகா கூறுகையில், பிட்ச் பேட்டிங்கிற்கு நன்றாக இருந்தது. நல்ல தொடக்கத்தை பெற்றோம். ஆனால் மிடில் ஓவர்களில் விக்கெட் இழந்ததால் அதிக ரன்களை எடுக்க முடியில்லை. 25-30 ரன் குறைவாக எடுத்துவிட்டோம். செட் பேட்ஸ்மேன்கள் 15-16 ஓவரை வரை தொடர வேண்டும்.  பிஞ்ச்-வார்னர் எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பது தெரியும். பவர்பிளேவில் அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். அதை செய்ய முடியவில்லை, என்றார்.

Related Stories: