உத்தமபாளையம் அருகே நான்குவழிச்சாலையில் களிமண் கொட்டி மூடல்-‘நகாய்’ நடவடிக்கையால் விவசாயிகள் அவதி

உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே, நான்குவழிச்சாலையில் நகாய் நிர்வாகம் களிமண்ணை கொட்டி மூடியதால், அறுவடை நெல்லை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். உத்தமபாளையம் அருகே, நெல் சாகுபடி செய்த நன்செய் நிலங்களில் நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலங்களை தேர்வு செய்தபோது, வயல்களுக்கு தண்ணீர் கிடைக்காது என கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களை உள்ளூர் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சமரசம் செய்தது. நான்குவழிச்சாலை பணிகள் முடிந்த நிலையில், போக்குவரத்திற்காக இன்னும் திறக்கப்படவில்லை.

ஆனால், நான்குவழிச்சாலையின் இருபுறமும் வயல்வெளிகளாக உள்ளன. நெல் அறுவடை தொடங்கிய நிலையில், நெல் மூட்டைகளை டிராக்டர்கள் மற்றும் லாரிகள் மூலமாக விவசாயிகள் ஏற்றி, நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், ‘நகாய்’ நிர்வாகம் நான்குவழிச்சாலையை களிமண் போட்டு மூடியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

இதனால், டிராக்டர்கள், லாரிகளில் நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல முடியவில்லை.அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விளைநிலங்களில் இருந்து கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக விற்றால்தான் ஓரளவு லாபம் கிடைக்கும். வயலில் இருப்பு வைத்தால் ஈரப்பதம் அதிகமாகி இழப்பு ஏற்படும். எனவே, விவசாயிகள் செல்லக்கூடிய நான்குவழிச்சாலை பாதையை மூடியுள்ள நகாய் நிறுவனத்தினரை அழைத்து, தேனி மாவட்ட நிர்வாகம் கண்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விபத்து காலங்களில் மூடவில்லை

உத்தமபாளையத்திற்கும் அனுமந்தன்பட்டிக்கும் இடையே நான்குவழிச்சாலையில் தினசரி விபத்துகள் நடந்தன. குறிப்பாக கார், டூவீலர்கள் விபத்தில் உயிரிழப்பு, காயங்கள் ஏற்பட்டன. அப்போது சாலையை மூட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆனால், இப்போதோ, நெல் அறுவடை சமயத்தில் விளைபொருட்களை கொண்டு செல்லும் நேரத்தில் களிமண்ணால் சாலையை மூடியுள்ளனர்.

Related Stories: