குன்றத்தூரில் தனியார் ஆக்கிரமித்திருந்த ரூ.31 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய் துறையினர் நடவடிக்கை

குன்றத்தூர்: குன்றத்தூரில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.31 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய் துறையினர் மீட்டு  நடவடிக்கை எடுத்துள்ளனர். குன்றத்தூர் அடுத்த நத்தம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 2.7 ஏக்கர் களம் புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து, திருமண மண்டபம் கட்டி வருவதாக ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.  அது அரசு நிலம் என தெரிய வந்தது. இதையடுத்து அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய் துறையினர் சார்பில் முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும்,  ஆக்கிரமிப்பாளர் தொடர்ந்து அந்த நிலத்தை காலி செய்யாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் முத்து மாதவன் தலைமையில், குன்றத்தூர் தாசில்தார் பிரியா மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முறையாக நோட்டீஸ் வழங்கினர்.  பின்னர் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு, அரசு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த கட்டிடத்தை இடித்து அகற்றினார். மேலும், இது அரசுக்கு சொந்தமான நிலம். இங்கு அத்துமீறி நுழைபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விளம்பர  பதாகையும்  வைக்கப்பட்டது. தற்போது, மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.31 கோடி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது போன்று அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு குன்றத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories:

More
>