வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக தொழிலதிபரிடம் ரூ13.9 லட்சம் மோசடி செய்த ஜார்கண்ட் கொள்ளையர்கள் 3 பேர் கைது

* கொல்கத்தாவில் மத்திய குற்றப்பிரிவு தனிப்படை அதிரடி

* ரூ11.20 லட்சம், 160 சிம்கார்டு, சொகுசு கார் பறிமுதல்

* 3 நாள் போலீஸ் காவலில் விசாரணை

சென்னை: மொபைல் கம்பெனி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக தொழிலதிபரிடம் வங்கி கணக்கு விபரங்களை கேட்டு ரூ.13.9 லட்சம் மோசடி செய்த கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கொல்கத்தாவில் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11.20 லட்சம் பணம், மோசடிக்கு பயன்படுத்திய 160 சிம்கார்டுகள், 20 செல்போன்கள், சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமு(42) (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். கடந்த மாதம் 26ம் தேதி எனது செல்போன் எண்ணிற்கு மொபைல் கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக ஒருவர் பேசினார். அப்போது நான் பயன்படுத்தும் சிம்கார்டுக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்படாமல் உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆணங்கள் சமர்ப்பிக்கப்படாமல் இருந்ததால் உங்கள் சேவை துண்டிக்கப்படும் என்று கூறினார். இதை தவிர்க்க www.rechargecube.com என்ற இணையதளத்தில் இருந்து ‘பாஸ்ட் சப்போர்ட்’ என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து ரூ.5 பணத்தை அனுப்ப வேண்டும் என்று கூறினார்.

அதை உண்மை என்று நம்பி அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்து தனது வங்கி கணக்கு விபரங்களை சமர்ப்பித்து பணத்தை அனுப்ப முயற்சி செய்தேன். அப்போது அந்த நபர் மீண்டும் போன் செய்து ரூ. 5 பணம் இன்னும் வரவில்லை என்று வேறு ஒரு செல்போனில் இருந்து வேறு ஒரு வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலுத்துமாறு கூறினார். அதை நம்பி நான், எனது மனைவியின் செல்போனில் மனைவியின் வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்தேன். ஆனால் பணம் எங்கள் சேவை மையத்திற்கு வரவில்லை என்று கூறி சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சி செய்யுமாறு கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.

அடுத்த சிறிது நேரத்தில் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ.90,134 பணம் எடுக்கப்பட்டதாக செல்போனில் குறுஞ்செய்தி வந்தது. அதேபோல், எனது மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8,60,850 பணம், ரூ.3,59,000 பணம் என மொத்தம் ரூ.13,09,984 பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்து உடனே செல்போன் சேவை மையத்திற்கு தொடர்பு கொண்டு போது அவர்கள் எடுக்கவில்லை என்றனர். பிறகு தான் நான் மோசடி நபர்களிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. எனவே மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், தொழிலதிபரின் செல்போனுக்கு வந்த எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து மோசடி கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்தது. உடனே மத்திய குற்றப்பிரிவின் தனிப்படை போலீசார் கொல்கத்தாவிற்கு விரைந்து சென்று மேற்கு வங்க போலீசார் உதவியுடன் வங்கி மோசடியில் ஈடுபட்ட ஜார்கண்ட் மாநிலம் ஜம்தாரா மாவட்டத்தை சேர்ந்த பிஷ்வநாத் மண்டல்(25), பாபி மண்டல்(31), கொல்கத்தாவை சேர்ந்த ராம்புரோஷாத் நாஷ்கர்(30) ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 20 செல்போன்கள், 160 சிம்கார்டுகள், 19 வங்கி கணக்கு அட்டைகள், 4 ஸ்வைப்பிங் மிஷின்கள், ரூ.11.20 லட்சம் ரொக்க பணம் மற்றும் ஒரு சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் இவர்கள் பண மோசடியில் ஈடுபட்டது மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கோதண்டராஜ் அனுமதி அளித்துள்ளார். எனவே, கைதான மூன்று பேரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி குறித்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>