பாஜக நிர்வாகி கல்யாணராமனின் ஜாமீன் மனு தள்ளுபடி.: குண்டர் சட்டத்தை மேற்கோள்காட்டி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாஜக நிர்வாகி கல்யாணராமனின் ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் என்பவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அதில், சென்னை வளசரவாக்கத்தில் வசிக்கும் கல்யாணராமன் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வை வளர்க்கும் வகையிலும், மோதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

அதனையடுத்து, சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான உள்ள கல்யாணராமன், கடந்த 2 மாதங்களில் மட்டும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக 18 ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  

அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் கல்யாணராமனை கடந்த 16-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இந்தநிலையில், கல்யாணராமன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உத்தரவு பிறப்பித்தது.

Related Stories: