கொல்லிமலை அடிவாரம் காப்புக்காட்டில் சந்தன மரம் வெட்டி கடத்தல்-2 பேருக்கு ₹50 ஆயிரம் அபராதம்

சேந்தமங்கலம் : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரப் பகுதியான காரவள்ளி காப்புக்காட்டில், சிலர் சந்தன மரங்களை வெட்டி கடத்துவதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், நாமக்கல் வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர், காரவள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக நடந்து வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.

இதில், அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 9 சந்தனக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.உடனே, அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் கொல்லிமலை தேவனூர்நாடு பகுதியைச் சேர்ந்த பரமசிவம்(40), சூலவந்திபட்டியைச் சேர்ந்த கனகராஜ்(35) என்பது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளின் மதிப்பு சுமார் ₹10 ஆயிரம் இருக்கும். இதையடுத்து, சந்தனமரத்தை வெட்டி கடத்திய இருவருக்கும், வனத்துறையினர் தலா ₹25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories: