அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி செய்ததாக எடப்பாடி பி.ஏ. மீது வழக்கு: ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை; ஏற்கனவே பல்வேறு முறைகேட்டில் சிக்கியது அம்பலம்

சேலம்: சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே பல்வேறு மோசடிகளில் சிக்கியதும் அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஊழல் குறித்து ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பி.ஏ.வான மணி (50) என்பவர், சேலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.28 கோடி மோசடி செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் சேலத்தை அடுத்த நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி. எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து மணியின் கை மேலோங்கியது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சேலம் வருவார். அப்போது அவரிடம் தெரிவித்துவிட்டு, ஏராளமான அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதற்காக பெரும் தொகையை மணி பெற்றுள்ளார். மாவட்ட போலீஸ் அதிகாரிகளிடம் முதல்வர் மாற்றச்சொன்னதாக கூறியும் அதிகாரிகளை மாற்றி பல கோடி சம்பாதித்துள்ளார்.

குறிப்பாக சேலம் மேற்கு சரக உதவி கமிஷனராக இருந்த விஜயகார்த்திக்ராஜா என்பவரை 2 மாதம் காத்திருப்போர் பட்டியலில் வைத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தூக்கியடித்தார். ஒவ்வொரு 3மாதத்திற்கு ஒரு முறையும் அவரை வேண்டும் என்றே மாற்றியதாகவும் அவர் மீது புகார்கள் இருக்கிறது. இவ்வாறு தனக்கு வேண்டாத அதிகாரிகளையும் மாற்றிவிடுவார். வேண்டப்பட்டவர்கள் கேட்ட இடத்திற்கு இடமாறுதல் செய்வார். முதல்வரிடம் இருப்பதாக கூறியே இந்த மோசடி வேலைகளில் அவர்  ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நெய்வேலி அருகே குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் இன்ஜினியர் தமிழ்செல்வன் (28). இவரது தந்தை குணசேகரன் நெய்வேலியில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். தமிழ்செல்வனுக்கு  அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் வாங்கி கொண்டு வேலை வாங்கி கொடுக்கவில்லை. புகாரின்பேரில் சேலம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்றுமுன்தினம் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மணி மற்றும் அதிமுக பிரமுகர் செல்வகுமார் ஆகியோர் மீது கூட்டுசதி,  மோசடி ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதேபோல சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பக்கமுள்ள செம்மாண்டப்பட்டி கொப்பத்தார் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வகுமார். அதிமுக பிரமுகரான இவர், எடப்பாடியார் பேரவையை நடத்தி வருகிறார். இவர் சேலம் மாவட்ட

எஸ்.பி. ஸ்ரீஅபிநவ்விடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில்,  எடப்பாடி பழனிசாமியின் தனிப்பட்ட உதவியாளர் மணி, எடப்பாடி ஆட்சியில் உங்களுக்கு வேண்டப்பட்ட நபர்கள் இருந்தால் சொல்லுங்கள், அரசு வேலை வாங்கி தருகிறேன் என்று கூறினார்.

நானும், மேச்சேரி பள்ளிபட்டியை சேர்ந்த சிவக்குமாரும், 2019 முதல் 2020 வரை 25 பேரிடம் பணம் வாங்கினோம். வனத்துறை, மின்சாரத்துறை, பள்ளியில் உள்ள ஆய்வகம், ரேஷன் கடை, கால்நடைத்துறை மற்றும் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை என மொத்தம் 25 பேரிடம் ரூ.1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி கொடுத்தோம். இதில் மின்சாரத்துறையில் உதவி செயற்பொறியாளர் பதவிக்காக ரூ.15 லட்சம், உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலைக்கு ரூ.30 லட்சம் என வாங்கி கொடுத்தோம். பணத்தை வாங்கிய மணி, சொன்னபடி அரசு வேலை வாங்கி தரவில்லை.

இதனால் பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதனால் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு மணியிடம் கேட்டோம். ஆனால் அவர் பணம் கொடுக்காமல், பணத்தை கேட்டால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார் என கூறியிருந்தார். இதேபோல் மேலும் பலர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் பல கோடி ரூபாய் பண மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. தற்போது போலீசாரின் பிடியில் சிக்கியுள்ள மணி மற்றும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட செல்வகுமார் ஆகியோரிடம் ரகசிய இடத்தில் வைத்து மாவட்ட மத்திய குற்றப்பிரிவு டிஎஸ்.பி.இளமுருகன் விசாரித்து வருகிறார்.

இதற்கிடையில் மணி ஏற்கனவே பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியவர் என்பதும் அம்பலமாகி உள்ளது. ஆரம்பத்தில் மரக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளராக இருந்தபோது அங்கு கையாடல் செய்ததாக புகார் எழுந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அங்குள்ள அதிமுக அலுவலகத்தில் உறுப்பினர் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கும் பணியை செய்தார். அப்போது மாவட்ட செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவருக்கான உதவியாளர் என்று கூறிக்கொண்டு மணல் பதுக்கல், நிலம் ஆக்கிரமித்தல் என்று பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து நடுப்பட்டியில் பண்ணை வீடு ஒன்றை கட்டியவர், அந்த பகுதியில் நடந்த கூட்டுறவு வங்கி விழாவில் முதல்வரின் உதவியாளர் என்று கல்வெட்டு வைத்தும் பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

* உதவியாளராக மாறியது எப்படி?

எடப்பாடி பழனிசாமி ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். இவ்வாறு ஜோசியம் பார்க்கும்போது, மாற்றுத்திறனாளி ஒருவரை உதவியாளராக வைத்துக்கொண்டால் தொட்டதெல்லாம் வெற்றியாகும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அந்தநேரத்தில்தான் நடுப்பட்டி மணி அங்கு வந்துள்ளார். அவர் ஒரு காலை லேசாக தெத்தி நடப்பார். உடனடியாக மணியை தனது உதவியாளராக பணியில் அமர்த்திக்கொண்டார். அதில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அரசியலில் எந்த சறுக்கலும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனை காரணமாக வைத்து என்னை யாராலும் எதுவும் செய்யமுடியாது என்று கூறி மணி, கோடி கோடியாக பணம் குவித்ததாக கட்சியினர் கூறி வருகின்றனர்.

Related Stories: