ராமநாதபுரத்தில் மீண்டும் புத்துயிர் பெறும் மல்லர் கம்பம் கலை-பயிற்சியில் 60 வீரர்,வீராங்கனைகள்

ராமநாதபுரம் :  உடல் வலிமை பெறும் கலையான தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் கலையை மீட்டெடுக்கும் வகையில், ராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் கழகம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு 60க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். பாரம்பரிய சிலம்பாட்டத்தில் கம்பை மனிதர்கள் சுற்றுவர். ஆனால் மல்லர் கம்பத்தில் மனிதர்கள் உடலை வளைத்து சுழல்வதே மல்லர் கம்பம் கலையாகும். பண்டைய காலத்தில், தமிழக போர் வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் உடல் வலிமை பெற இந்த மல்லர் விளையாட்டை விளையாடி உடலை வலுவடையச் செய்து வந்தனர்.

மல்லர் விளையாட்டை சோழர்கள், பல்லவர்கள் போற்றி பாதுகாத்து வந்ததால் அவர்களின் அரசவையில் தலைசிறந்த மல்லர்கள் இருந்தனர். மல்லர் விளையாட்டில் சிறந்து விளங்கிய முதலாம் நரசிம்மவர்ம பல்லவன் மாமல்லர் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறப்படுகிறது. வர்மக்கலை போன்ற தற்காப்பு கலைகளை போல மல்லர் கம்பம் தன்னிகரற்ற உடல் வலு விளையாட்டாகும்.

மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் மல்லர் கம்பம் இன்றைக்கும் கூட பிரபலமாக உள்ளது. மல்லர் கம்பம் விளையாட்டை அரசு விளையாட்டாக பல மாநிலங்கள் அங்கீகரித்துள்ளன. மகாராஷ்டிராவில் எந்த விழா தொடங்கினாலும் இறை வணக்கத்திற்கு பின் 5 நிமிடம்  மல்லர் பயிற்சி நடைபெறும். தமிழகத்தில் வழக்கொழிந்த இந்த மல்லர் கம்பம் விளையாட்டும் மீட்டெடுத்து புத்துயிர் அளிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் தேசிய பயிற்சியாளர் தங்கப் பதக்கம் விருது பெற்ற செல்வமொழியன் பயிற்சி அளித்து ஆடவர் 60 பேருக்கு மல்லர் கம்பம் பயிற்சி பெற்றுள்ளனர். இதேபோல மரத்தில் கயறு கட்டும் உடல் வலிமையை வெளிப்படுத்தும் மல்லர் கம்பம் விளையாட்டில் 20 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர். இக்கலையை மேலும் பலருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் மல்லர் கம்பம் கழகம் தற்போது. தொடங்கப்பட்டுள்ளது. வீரர்களின் செய்முறையை கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைந்த வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் மல்லர் கம்பம் விளையாட்டை சிலம்பொலி கிராமிய கலை நிறுவனரும், பயிற்றுநருமான லோக சுப்ரமணியன் செயல்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அரசு விழாக்கள், கோயில் திருவிழாக்களில் மல்லர் கம்பம் விளையாட்டை இளையோர் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Related Stories: