வேட்டமங்கலம்- புங்கோடை இடையே சுற்று சுவர் இன்றி ஆபத்தான நிலையில் பொது கிணறு

வேலாயுதம்பாளையம் : வேட்டமங்கலம் - புங்கோடை அருகே விபத்து ஏற்படுத்தும் வகையில் பொதுகிணற்றுக்கு தடுப்பு சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேட்டமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட புங்கோடை குளத்துப்பாளையத்தில் இருந்து வேட்டமங்கலம் செல்லும் வழியில் கூட்டுறவு வங்கி அருகே பல ஆண்டுகளுக்கு முன்பே குடிநீர் தேவைக்காக பொது கிணறு வெட்டப்பட்டது. பின்னர் இக்கிணற்று நீர் உவர்ப்பாக மாறியது. இருப்பினும் தற்போது மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து அங்குள்ள அரசு துவக்கப்பள்ளி, பொது சுகாதார வளாகம், மயானம் ஆகிய இடங்களின் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தார் ரோட்டை ஒட்டி அமைந்துள்ள இக்கிணற்றின் சுற்றுசுவர் நாளடைவில் சிதிலமடைந்து தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது.இவ்வழியாக டூ வீலர், கார், பள்ளி வாகனங்கள் மற்றும் விவசாய பணிகளுக்காக டிராக்டர், வேன் என்று அதிகளவு வாகனங்கள் சென்று வருகின்றன.

இவ்விடம் அருகே ரோடு வளைவாக உள்ளதாலும், கிணற்றின் சுற்றுசுவர் ரோடு மட்டத்துக்கு உள்ளதாலும் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால் இக்கிணற்றில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக்கிணறு உள்ள இடத்தில் விபத்தை தடுக்கும் வகையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Related Stories: