டீசல் விலை உயர்வால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயக்கம்

ராமேஸ்வரம்: டீசல் விலை உயர்வால் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 10 நாட்களுக்கு மேலாக கடலுக்கு செல்லாமல் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்று மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஆனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டீசல் விலையால் கடந்த 9ஆம் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர். 100 ரூபாயை கடந்துவிட்ட 1 லிட்டர் டீசலை வாங்கி கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தாலும் நஷ்டமே மிஞ்சுவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசு மானிய விலையில் விசைப்படகுகளுக்கு 1800 லிட்டர் கொடுத்தாலும் அதிக விலையால் தங்களுக்கு எந்த லாபமும் இல்லை என்கின்றனர். ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 20,000திற்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் தங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: