சூடானில் ராணுவம் ஆட்சியை பிடித்ததற்கு ஐ.நா. கடும் கண்டனம் : பிரதமர், அமைச்சர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தல்!!

கைரோ: சூடான் நாட்டின் இடைக்கால பிரதமர் அப்தல்லா ஹம்தக் மற்றும் பல அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கிலும் மக்கள் சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.  சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ புரட்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள், அரபு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

சூடானுக்கான சுமார் 70 கோடி ரூபாய் அளவிலான பொருளாதார ஆதரவு நிதியை நிறுத்தி வைக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. சூடான் விவகாரம் குறித்து பேசிய பிரிட்டன் அமைச்சர் விக்கி ஃபோர்டு, சூடானின் ராணுவ தலைமை தனது போக்கை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மக்களின் போராட்டத்தை ராணுவம் ஒடுக்க நினைக்கிறது.சூடான் ராணுவத்தின் நடவடிக்கைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதவை, என்றார்.

சூடானில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. பொது சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே சூடானில் ஆட்சியை தட்டி பறித்த ராணுவத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருவதால் அந்நாட்டில் பதற்றம் சூழ்ந்து இருக்கிறது.

Related Stories:

More
>