வனத்துறை அனுமதியின்றி இயங்கிய மர அறவை மில்லுக்கு சீல்

திருப்போரூர்: திருப்போரூரில் வனத்துறை அனுமதியின்றி இயங்கிய மர அறவை மில்லுக்கு போலீசார் சீல் வைத்தனர். திருப்போரூர் ரவுண்டானா அருகே தனியாருக்கு சொந்தமான மர அறவை மில் உள்ளது. இந்த அறவை மில்லுக்கு இதுவரை வனத்துறை ஒப்புதல் மற்றும் வருவாய்த்துறை ஒப்புதல் பெறவில்லை என கூறப்படுகிறது.  இதையடுத்து அந்த அறவை மில் நிர்வாகத்திற்கு வனத்துறை சார்பில் அனுமயின்றி இயங்கும் மில்லுக்கு ஏன் சீல் வைக்கக் கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் மர அறவை மில்லை ஆய்வு செய்தனர். அப்போது, மர அறவை மில் எந்த அனுமதியும் இல்லாமல் இயங்குவது உண்மை என தெரியவந்தது.

இதையடுத்து மர அறுவை ஆலை இயக்கத்தை நிறுத்த வேண்டும் அல்லது நகரப்பகுதியை விட்டு 2 கிமீ தூரம் தள்ளி இயங்க  அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், தனியார் மர ஆலை தரப்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், மேற்கண்ட ஆலைக்கு சீல் வைக்க வனத்துறை முடிவு செய்தது. தொடர்ந்து, திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யாண் தலைமையில் நேற்று காலை, வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் அமைந்திருந்த மர அறவை ஆலைக்கு சென்றனர். அங்கிருந்த அறவை இயந்திரங்களை பூட்டி சீல் வைத்தனர். மேலும், மின் வாரியம் மூலம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Stories:

More
>