நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் தீபாவளி விற்பனை களை கட்டியது-கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதல்

நெல்லை :  தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடைகளில் விற்பனை இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஜவுளி கடைகளில் அதிக கூட்டம் காணப்பட்டது.தீபஒளி திருநாளாம் தீபாவளி பண்டிகை, வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இனிப்பு பலகாரங்கள் செய்து பொதுமக்கள் கொண்டாடுவது வழக்கம். கொரோனா இவ்வாண்டு குறைந்துவிட்ட நிலையில்,

தீபாவளி பண்டிகைக்காக விற்பனை இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது.

இப்பண்டிகையையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கடைவீதிகளில் அலைமோதி வருகின்றனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளான கடந்த 2 நாட்களாக தீபாவளி விற்பனை சூடுபிடித்தது. நெல்லை மாவட்டத்தில் டவுன் ரத வீதிகள், வண்ணார்பேட்டை, வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஜவுளி மற்றும் நகை மற்றும் பாத்திர கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வண்ணார்பேட்டையில் உள்ள ஜவுளிக் கடைகளில் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை அலை, அலையாய் மக்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. ஜவுளி வியாபாரத்தால் பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் வரத்தும் நேற்று அதிகரித்தது. தெற்கு பைபாஸ் சாலையில் நீண்ட தூரம் வாடிக்கையாளர்களின் கார்கள் அணிவகுத்தன.

நெல்லை டவுன் ரதவீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. பாரம்பரியமிக்க வடக்கு ரதவீதிகளில் வடமாநிலத்தவர்கள் பல்ேவறு ஜவுளி ரகங்களோடு விற்பனையை அதிகரித்தனர். வடமாநிலங்களில் இருந்து மொத்த விலைக்கு தருவித்த ஆடைகளை ரதவீதிகளில் கூவி கூவி விற்பனை செய்தனர். இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய நகரங்களில் உள்ள ஜவுளி மற்றும் பாத்திரக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளியை ஒட்டி தள்ளுபடி அறிவித்திருந்த கடைகளில் அதிகபட்ச கூட்டத்தை காண முடிந்தது.

ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராம மக்கள் அதிகாலை முதலே வந்து துணி மற்றும் நகை, பாத்திரங்களை வாங்கிச் சென்றனர். அரசு ஊழியர்களுக்கும், தனியார் நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் போனஸ் போடப்பட்டு விட்டதால் மகிழ்ச்சியோடு அவர்கள் தீபாவளி விற்பனையை அரங்கேற்றி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி, வைகுண்டம், கோவில்பட்டி, விளாத்திகுளம், உடன்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பட்டாசு கடைகளிலும் நல்ல கூட்டத்தை காண முடிகிறது.

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருக்கும் நிலையில், தமிழக அரசும் 24 மணி நேரமும் கடைகளை திறந்திட அனுமதி அளித்துள்ளது. எனவே இரவு நேரங்களிலும் கூட பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி 3 மாவட்டங்களிலும் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. தீபாவளி பொருட்கள் வாங்க வருவோரை ஆங்காங்கே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து செல்லவும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தீபாவளிக்கு ஒரு வாரமே உள்ள நிலையில், இவ்வாரம் விற்பனை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

டெய்லர்களுக்கு கடும் கிராக்கி

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் டெய்லர் கடைகளில் நல்ல கூட்டத்தை இவ்வாண்டு காண முடிகிறது. தீபாவளி புத்தாடை எடுத்து தைக்க கொடுப்போர் ஒருபக்கம் குவிந்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் வரும் 1ம் தேதி திறப்பதால், பள்ளி சீருடையை தைக்கவும் மாணவ, மாணவிகள் டெய்லர் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். சில டெய்லர்கள் ‘தீபாவளி முடியும் வரை சட்டை தைக்க அணுகாதீர்’ என போர்டு எழுதி வைத்துள்ளனர். தீபாவளி ஆடைகளும், பள்ளி சீருடைகளும் ஒரே சமயத்தில் குவிவதால், டெய்லர்கள் துணிகளை தைக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Related Stories: