புதுக்கோட்டையில் பெய்த கன மழையால் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது; சீரமைக்கும் பணியை சட்ட மன்ற உறுப்பினர் முத்துராஜ் ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பெய்த கன மழை காரணமாக சாந்தாரம்மன் கோவில் அருகே உள்ள பல்லவன் குளம் நிறைந்து கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பிலிருந்தே புதுக்கோட்டை மாவட்டதில் பெரும்பாலான இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இந்நிலையில் மழையின் அளவு சற்று குறைந்து 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக புதுக்கோட்டை நகர பகுதி முழுவதும் பொன்னமராவதி, விராலி மலை, அறந்தாங்கி, கீரனூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை அதிக அளவு பெய்தது.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காற்று, இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ததால் முன்னெச்சரிக்கை காரணமாக மின்சாரமும் பல்வேறு இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை நகர பகுதி முழுவதும் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கன மழையால் புதுக்கோட்டை நகரப்பகுதிக்குட்பட்ட கீழராஜா வீதி அருகாமையிலுள்ள பல்லவன் குளம் நிறைந்துள்ளது. குளத்திலிருந்து  வெளியாகும் தண்ணீர் குளத்திற்கு அருகாமையிலுள்ள சாந்தநாதர் சுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் அந்த தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்று பொதுமக்கள், பக்தர்கள் ஆகியோர் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது கோவில் முழுவதும் தண்ணீரால் சூழப்பட்டதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் முழுவதும் கோயிலுக்குள் நுழைந்துள்ளதால் விஷ ஜந்துக்கள் அதிகமாக இருந்து வருவதாகவும் ஒவ்வொரு மழைக்கும் பல்லவன் குளம் நிறைந்து கோயிலுக்குள் தண்ணீர் வருவதாகவும் உடனடியாக தண்ணீர் வெளியேறும் இடத்தில் வரத்து வாய்க்காலை முறைப்படுத்தி இனி வரக்கூடிய காலங்களில் மழைநீர் கோயிலுக்குள் புகாதவாறு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சாந்தநாதர் சுவாமி கோவில் இந்து அறநிலைக்கு சொந்தமான கோயில் என்பதால் முறையாக பராமரிக்க வேண்டுமென்றும்  வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று இரவு 60 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் தொடர்ச்சியாக வடகிழக்கு பருவமழை தொடரும் பட்சத்தில் இந்த ஆண்டு விவசாயம் செழுமையாக இருக்கும் என்று விவசயிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல்வேறு இடங்களில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தாலும் சில இடங்களில் தூர்வாரும் பணி நடைபெறாமல் உள்ளதால் உடனடியாக வரத்து வாய்க்காலை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பல்லவன் குளம் நிரம்பி வெளியாகும் தண்ணீரை சீரமைக்கும் பணியை புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் முத்துராஜ் ஆய்வு செய்து பணியை விரைவாக முடிக்க நகர்ச்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: