கிரெம்ளின் கோப்பை டென்னிஸ்: கோன்டவெய்ட் சாம்பியன்

மாஸ்கோ: கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், எஸ்டோனியா வீராங்கனை அனெட் கோன்டவெய்ட் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எகடரினா அலெக்சாண்ட்ரோவாவுடன் (26 வயது, 37வது ரேங்க்) நேற்று மோதிய கோன்டவெய்ட் (25 வயது, 20வது ரேங்க்) 4-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 22 நிமிடத்துக்கு நீடித்தது. முதல் செட்டை 4-6 என இழந்த கோன்டவெய்ட், 2வது செட்டிலும் 0-4 என பின்தங்கியிருந்த நிலையில், தொடர்ச்சியாக புள்ளிகளைக் குவித்து வெற்றியை வசப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

கோன்டவெய்ட் கைப்பற்றும் 4வது சாம்பியன் பட்டம் இது. இதே தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் செக் குடியரசின் கேதரினா சினியகோவா - ஜெலனா ஓஸ்டபென்கோ (லாட்வியா) ஜோடி 6-2, 4-6, 10-8 என்ற செட் கணக்கில் ரலுகா ஒலாரு (ருமேனியா) - நாடியா கிச்சனோக் (உக்ரைன்) ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Related Stories:

More
>