போதையில் தகராறு: நண்பரை கொல்ல முயன்ற 2 வாலிபர்கள் கைது

பூந்தமல்லி: சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (32). இவர், அப்பகுதியில் வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு நேற்று முன் தினம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்தது. பின்னர் கதவை தட்டி கண்ணனை வெளியே வர சொன்னது. அவர் வெளியே வந்ததும், 4 பேர் கும்பல் கண்ணனை கத்தியால் சரமாரியாக வெட்டி கொல்ல முயன்றனர். இதில் கண்ணன் உஷாராகி வீட்டுக்குள் ஓடிச்சென்று கதவை சாத்திக்கொண்டார்.

இதனால் ஆத்திரமான 4 பேர் கும்பல், அங்கிருந்த தண்ணீர் கேன்களை கத்தியால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அங்கு நின்றிருந்த கார், ஆட்டோவின் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டு, பைக்கில் 4 பேர் கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுரவாயலை சேர்ந்த அபுபக்கர் (26), மோகன் (25) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன் மதுரவாயல் டாஸ்மாக் கடையில் கண்ணனும் அவரது நண்பர் வினோத் (26) என்பவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றியது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமான வினோத், கண்ணனை கொல்வதற்கு நேற்று முன் தினம் இரவு அவரது வீட்டுக்கு தனது 3 நண்பர்களுடன் வந்திருப்பது தெரியவந்தது.

வினோத் மீது ஏற்கெனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. புகாரின்படி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான வினோத் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>