இலங்கை கடற்படை அட்டூழியத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்திவைப்பு

அறந்தாங்கி: இலங்கை கடற்படை அட்டூழியத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் சென்ற விசைப்படகை நேற்றுமுன்தினம் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பலை கொண்டு மோதியுள்ளனர். இதில் மீனவர் ராஜ்கிரண் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

சுகந்தன், சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். மீனவர் ராஜ்கிரண் உடலை விரைவில் கோட்டைப்பட்டினம் கொண்டு வரவும், சிறைபிடிக்கப்பட்ட 2 மீனவர்களை இலங்கை கடற்படையினரிடம் இருந்து மீட்கவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மீனவர் ராஜ்கிரண் உயிரிழப்பிற்கு காரணமான இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ராஜ்கிரண் உடலை கோட்டைப்பட்டினம் கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விசைப்படகு மீனவர்கள் 1500 பேர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதனால் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். தற்போது மேலும் ஒரு மீனவரின் உயிரை பறித்துள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மீனவரின் உடல் கோட்டைப்பட்டினம் வரும் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளோம் என்றனர்.

Related Stories:

More
>