மார்த்தாண்டத்தில் சேதமடைந்த சாலையை சீரமைத்த போலீசார்,வர்த்தக சங்கத்தினர்-பொதுமக்கள் பாராட்டு

மார்த்தாண்டம் : குமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய வர்த்தக நகரம் மார்த்தாண்டம் ஆகும் .இங்கு மிகப் பெரிய வணிகச்சந்தை, வணிக நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில் நிலையம் உள்ளிட்டவை உள்ளன. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக நூற்றுக்கணக்கான வாகனங்களில் மார்த்தாண்டம் நகருக்கு வந்து செல்கின்றனர். மேம்பாலத்தின் அடிப்பகுதியில் சாலை மிக மோசமாக பழுதடைந்து காணப்படுகிறது.

 மேம்பாலம் கட்டும்போது ஒழுங்காக  மழைநீர் வடிந்து செல்வதற்கான வடிகால் வசதி செய்யப்படவில்லை. மேலும் குழித்துறை நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் குழாய்கள் பழுது பார்க்க அடிக்கடி சாலைகளை தோண்டி சேதப்படுத்துகின்றனர்.இதனால் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கீழ் உள்ள சாலைகள் முற்றிலும் சேதமடைந்து வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சாலையை சீர் செய்ய சம்பந்தபட்ட துறையினரும் கண்டும் காணாமல் உள்ளனர்.

இதையடுத்து மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார்  மற்றும் போலீசார் மார்த்தாண்டம் நகர வர்த்தக சங்க நிர்வாகிகள் இணைந்து சாலையில் குண்டும் குழியுமாக உள்ள பகுதியில் ஜல்லி மண் கலந்த கலவையைக் கொட்டி பம்மம் ரேஷன் கடை முதல் ஐசக் மருத்துவமனை வரை தற்காலகமாக சீரமைத்தனர். மேலும் மார்க்கெட் ரோடு செல்லும் சாலையும் சீர் செய்யப்பட்டது. போலீசார் - வர்த்தக சங்கத்தினரின் சீரமைப்பு பணிகளை பொதுமக்கள், வணிகர்கள் பாராட்டினர்.

Related Stories: