இருதரப்பினரிடையே பயங்கர மோதல்: தகராறை விலக்க சென்ற 2 எஸ்ஐ மண்டை உடைந்தது

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் அடுத்த திருவைகாவூரில் மண்ணியாற்று பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் கொடிக்கம்பம் வைத்துள்ளனர். இதை மற்றொரு சமூகத்தினர் அகற்ற வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில், கடந்த 17ம்தேதி திருவைகாவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை, உள்ளிட்ட கிராம மக்கள் திருவைகாவூர் மண்ணியாற்று பாலத்தில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மதுசூதனன் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாமல் இரு தரப்பினரும் சென்றனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மீண்டும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் திருவைகாவூர் மண்ணியாற்று பாலத்தில் நின்று தகாத வார்த்தைகள் பேசியதால், இதனை அறிந்த மற்றொரு சமூகத்தினரும் அதே இடத்திற்கு சென்று திட்டியதில் இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாட்டில், கல் மற்றும் கம்பால் அடித்து கொண்டனர். தகராறை தடுக்க முயன்ற சப்.இன்ஸ்பெக்டர் சுகுணா (37) , முருகேசன் (55) ஆகியோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து 2 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இரு தரப்பையும் சேர்ந்த 8 பேர் படுகாயத்துடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தஞ்சை சரக ஐஜி பாலகிருஷ்ணன் தலைமையில், டிஐஜி பிரவேஸ்குமார், தஞ்சை எஸ்.பி ரவளிப்பிரியா, மயிலாடுதுறை எஸ்பி சுகுணா சிங், கும்பகோணம் ஆர்.டி.ஓ. ராம்குமார் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய திருவைகாவூர் கிராமத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 10 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர். ஆயுதப்படை மற்றும் அதிரடி படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>