எழும்பூர் லாட்ஜில் பரபரப்பு தற்கொலை செய்த நபரின் உடல் நள்ளிரவில் காலி இடத்தில் வீச்சு: லாட்ஜ் மேலாளர், ஊழியர் சிக்கினர்; சிசிடிவி காட்சி வைத்து விசாரணை

சென்னை: லாட்ஜில் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை, போலீசாருக்கு தெரிவிக்காமல் லாட்ஜ் மேலாளர் தனது ஊழியருடன் சேர்ந்து உடலை காலி இடத்தில் வீசியுள்ளனர். சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றின் பின்புறம், துர்நாற்றம் வீசுவதாக லாட்ஜ் மேலாளர் பீர் முகமது எழும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் லாட்ஜ் பின்புறம் வந்து பார்த்தபோது, 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் கிடந்தது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும், லாட்ஜ் அமைந்துள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 3ம் தேதி இறந்த நபர் புகார் அளித்த லாட்ஜிக்கு வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. மேலும், கடந்த 4ம் தேதி நள்ளிரவு லாட்ஜில் இருந்து ஒருவரை மொட்டை மாடிக்கு தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், புகார் அளித்த லாட்ஜ் உரிமையாளர் பீர் முகமது என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, ஆந்திரா மாநிலம் வாரங்கல் பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(45)  என்றும், கடந்த 3ம் தேதி எந்த ஆவணங்களும் இல்லாமல் அறை எடுத்து தங்க வந்தார். ஆவணங்கள் இல்லாததால் நாங்கள் அவருக்கு அறை கொடுக்கவில்லை. ஆனால் அவர், உடனே சென்று விடுவதாக கூறி அறை கேட்டார். நாங்களும் அறை கொடுத்தோம். ஆனால் அவர் அறை எடுத்த மறுநாள் வரை அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜில் ஊழியராக வேலை செய்யும் ரவி(43) உடன் சென்று அறையின் ஜன்னல் வழியாக பார்த்தோம். அப்போது அறையில் உள்ள மின் விசிறியில் ராஜ்குமார் தூக்கில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து.

இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் யாருக்கும் தெரியாமல் ராஜ்குமார் உடலை மீட்டு லாட்ஜின் மொட்டை மாடிக்கு கொண்டு சென்று யாரும், லாட்ஜின் பின்புறம் உள்ள காலி இடத்தில் எறிந்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து போலீசார் லாட்ஜ் மேலாளர் பீர் முகமது மற்றும் ஊழியர் ரவி ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் 2 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி இறந்த நபர் தற்கொலை செய்துதான் செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்று பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு வழக்கு பதிவு செய்து இருவரையும் ஆஜர்படுத்தும் படி போலீசாருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

Related Stories: