நிலச்சரிவில் சிக்கிய 30 பேர் உடல்கள் மீட்பு வெள்ளத்தில் மிதக்கும் கேரள மாவட்டங்கள்: நாளை முதல் மீண்டும் கனமழை எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கிறது. நிலச்சரிவில் புதைந்த 30 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கேரள மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் பெய்யும். வழக்கமாக இந்த பருவமழை காலங்களில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் பெருமளவு மழை பெய்யும். இந்த சமயத்தில் தான் சேதமும் அதிகமாக இருக்கும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதத்தில் பெரும்பாலும் அதிக வெள்ள சேதம் ஏற்படுவதில்லை. ஆனால் இவ்வருடம் இந்த மாதத்தில் தான் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக அக்டோபரில் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை பெய்யும். இந்த 3 மாதங்களில் பெய்ய வேண்டிய 84 சதவீதம் மழை கடந்த 2 வாரத்தில் கொட்டி தீர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2 நாட்களில் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் பலியாகி உள்ளனர். கோட்டயம் மாவட்டம்,  கூட்டிக்கல் பகுதியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் உடல்களும் மீட்கப்பட்டு விட்டன. இவர்களில் 6 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்  ஆவர். இடுக்கி மாவட்டம் கொக்கையாரில் நிலச்சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்ைத சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று முதல் மழையின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால் நாளை முதல் மீண்டும் மழை  தீவிரமாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில்  பெரும்பாலான மாவட்டங்கள் மழையால் சிக்கி தவித்து வரும் நிலையில்,  மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மக்களிடையே பீதியை  ஏற்படுத்தியுள்ளது.

* இறப்பிலும் பிரியாத அண்ணன், தங்கைகள்

இடுக்கி  மாவட்டம், கொக்கையார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை  சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேர் மண்ணில் புதைந்தனர். இவர்களில் சியாத்  என்பவரின் மனைவி பவுசியா(28), அவரது மகன் அமீன்(10), மகள் அம்னா(7),  தவுசியாவின் அண்ணன் பைசலின் மகள் அப்சானா(8), மகன் அசியான்(4) உட்பட 6 பேர் உடல்கள் ேநற்று முன்தினம் மீட்கப்பட்டன. உடல்களை மீட்கும் போது  அமீன், அம்னா, அப்சானா ஆகிய 3 பேரும் கட்டிபிடித்தபடி இறந்து கிடந்தனர். நேற்று 3 வயது சிறுவன் உடல் மீட்கப்பட்டது. இங்கு 7 பேர் மட்டுமே சிக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. கொக்கையார் நிலச்சரிவில் பவுசியா மற்றும் அவரது 2 குழந்தைகளும் இறந்தனர். நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக வீட்டின் அருகே கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பவுசியா தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம்  நடந்த ஒரு சில நிமிடத்திற்குள் பவுசியாவும் அவரது குடும்பத்தினரும் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

* இடுக்கி அணை இன்று திறப்பு

கனமழை காரணமாக கேரளாவில் இடுக்கி, முல்லை பெரியாறு, மலம்புழா உள்பட அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இடுக்கி அணையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2403 அடியாகும். இந்நிலையில் அணை நீர்மட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் 2394 அடியை எட்டியது. இதையடுத்து முதல்கட்ட நீல எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்ந்து 2396ஐ தாண்டியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டாம் கட்டமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று காலை அணைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் 11 மணிக்கு அணை திறக்கப்படும் என்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார். இதனால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் பம்பை, கக்கி, ஆனத்தோடு, சோலையாறு உட்பட பல அணைகள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: