முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 4.8 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளி சிக்கியது

திருச்சி: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 4.8 கிலோ தங்கம் சிக்கியது. ரூ.24 லட்சம் ரொக்கம், 3.75 கிலோ வெள்ளி மற்றும் பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்களும் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள விஜயபாஸ்கர் சகோதரர் உதயகுமார் வீட்டில் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.27,22,56,736 சொத்து சேர்த்ததாக சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாங்கி குவித்த சொத்து விவரங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸ் வெளியிட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர் மீதான முதல் தகவல் அறிக்கையில் அவர் குவித்துள்ள சொத்து பட்டியல் இடம் பெற்றுள்ளது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி கல்வி நிறுவனத்தையும் சி.விஜயபாஸ்கர் நடத்தி வந்துள்ளார். அரசு பதவியை தவறாக பயன்படுத்தி அறக்கட்டளை தொடங்கிய விஜயபாஸ்கர் 14 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அறக்கட்டளை மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர், கலை கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

பதவிக்காலத்தில் ரூ.6.58 கோடிக்கு 7 டிப்பர் லாரிகள், 10 சிமெண்ட் கலவை லாரிகள், ஜேசிபி வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது ரூ.53 லட்சத்துக்கு பி.எம்.டபுள்யூ கார் வாங்கி இருந்ததாகவும் எஃப்.ஐ.ஆரில் தகவல் வெளியாகியுள்ளது. ரூ.40 லட்சம் மதிப்பிலான 85 சவரன் நகைகளும் விஜயபாஸ்கரால் வாங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சிலாவட்டம், மொரப்பாக்கத்தில் சுமார் ரூ.4 கோடிக்கு விவசாய நிலங்களை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. லஞ்ச பணத்தில் சென்னை தியாகராயர் நகரில் ரூ.15 கோடிக்கு வீடு ஒன்றையும் விஜயபாஸ்கர் வாங்கியுள்ளார். அமைச்சராக இருந்த போது பல நிறுவன பங்குகளை ரூ.28 கோடிக்கு விஜயபாஸ்கர் வாங்கி இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது விஜயபாஸ்கர் தன் மனைவி, 2 மகள்கள் மற்றும் தனது பெயரில் ரூ.58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கியுள்ளார். வருமான வரித்துறை கணக்கின் படி 5 ஆண்டுகளில் விஜயபாஸ்கர் வருமானம் ரூ.58.64 கோடி என காட்டப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் வங்கிக்கடன், காப்பீட்டுத்தொகை என ரூ.34.5 கோடி செலவு செய்துள்ளார் விஜயபாஸ்கர். விஜயபாஸ்கரும் ரம்யாவும் 5 ஆண்டுகளில் செலவு போக ரூ.24 கோடி மட்டுமே சேமித்து இருக்க முடியும். வருமானத்துக்கு அதிகமாக ரூ.27.22 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக வியாகபாஸ்கர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வங்கி வைப்புத்தொகை, நகைகள், விவசாய நிலம், வீட்டுமனைகள், முதலீடுகளாக விஜயபாஸ்கரிடம் ரூ.6.4 கோடிக்கு சொத்துக்கள் உள்ளன. ராசி புளு மெட்டல்ஸ் என்ற கல்குவாரி நிறுவனத்தை நடத்தி வருகிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். கிரீன் லேண்ட் ஹைடெக் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார் விஜயபாஸ்கர். ஐரிஸ் எக்கோ பவர் வெஞ்ச்சர், ஓம் ஸ்ரீவாரி ஸ்டோன்ஸ் என்ற நிறுவனங்களிலும் விஜயபாஸ்கர் முதலீடு செய்துள்ளார். விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு சொந்தமாக ராசி எண்டர்பிரைசஸ், வி இன்ஃபிராஸ்ட்ரக்சர் நிறுவனங்களும் உள்ளன. முழுக்க முழுக்க விஜயபாஸ்கரால் முதலீடு செய்து நடத்தப்படும் அன்யா எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளராகவும் ரம்யா உள்ளார்.

Related Stories:

More
>