விருதுநகர் மருத்துவக்கல்லூரி பணிகள் இந்தாண்டுக்குள் முடியும்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

விருதுநகர்: விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது. விருதுநகரில் மருத்துவக்கல்லூரி நான்குவழிச்சாலையில் அமைந்திருப்பதால், ட்ரோமா கேர் சென்டர் அமைக்க, முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை இணைந்து வழிகாட்டு நெறிமுறைகளை செய்து வருகிறது. 5 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாஸ்க் அணிய தேவையில்லை என உலக சுகாதார நிறுவனமே கூறுகிறது. அனைத்துதுறை பணியிடங்களிலும் கண்காணிப்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

நோய் தொற்று வீதம் கண்காணிக்கப்படுகிறது. கூட்டங்கள், மூடிய அறைகள், நோய் உள்ளவர்களுடன் தொடர்பில் இருப்போர் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். பள்ளிகளை திறக்காததால் மாணவர்களுக்கு மனரீதியாக பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரிய வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 85 சதவீதத்திற்கு அதிகம் இருந்தாலும் கவனமுடன் இருக்க வேண்டும்.

கோவிட் குறைந்தாலும் அடுத்த அலை வராமல் மக்களை தயார்படுத்தி வருகிறோம். டெங்கு வராமல் தடுக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் அரசு மூலம் 5.04 கோடியும், தனியார் மூலம் 25 லட்சம் என மொத்தம் 5 கோடியே 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 18 முதல் 44 வயது வரை 2.59 கோடி, 45 முதல் 60 வயது வரை 1.76 கோடி, 60 வயதிற்கு மேற்பட்டோரில் 65 லட்சம் பேருக்கு போடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மேகநாதரெட்டி, டீன் சங்குமணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: