கபடி வீடியோவால் கடுப்பான பிரக்யா நீ ராவணன்… நாசமா போயிடுவ!

போபால்: சர்ச்சைகளுக்கு பேர் போன பாஜ பெண் எம்பி பிரக்யா சிங் தாகூர் கபடி விளையாடும் வீடியோ எடுத்த நபருக்கு சாபமிட்டுள்ளார். ‘அவன் ராவணன், வயசான பிறகும், அடுத்த பிறவியிலும் நாசமா போயிடுவான்...’ என புலம்பி உள்ளார். கடந்த 2008ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தவர் பாஜ பெண் எம்பி பிரக்யா தாகூர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை காரணம் காட்டி ஜாமீனில் வெளியே உள்ளார். இதே காரணத்திற்காக வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு பெற்றுள்ளார். ஆனால், விசாரணைக்கு ஆஜராகாத பிரக்யா, பல்வேறு நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளும் விதத்தால் சர்ச்சைக்குள்ளாகி வருகிறார்.

ஏற்கனவே இவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடமானமாடியதும், நவராத்திரி நிறைவு விழாவில் கர்பா நடமானமாடிய வீடியோவும் வைரலானது. இதே போல், கடந்த 2 தினங்களுக்கு முன் காளி கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் கபடி வீரர்களுடன் சேர்ந்து கபடி ஆடினார். இந்த வீடியோவும் வைரலானது. நேற்று முன்தினம் போபால் சந்த் நகர் பகுதியில் தசரா விழாவில் பங்கேற்ற பிரக்யா சிங், இந்த வீடியோ பற்றி பேசுகையில், ‘‘துர்கா பந்தலில் கபடி விளையாட்டு வீரர்கள், கபடி ஆடி போட்டியை தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அதனால் கபடி ஆடினேன். இதை வீடியோ எடுத்து சர்ச்சையாக்கி உள்ளனர். எல்லா இடத்திலும் ராவணன்கள் இருக்கிறார்கள். அவரை கேட்டுக் கொள்கிறேன். உன் கர்மா கெட்டு விட்டது. அதை சரி செய்யாவிட்டால், முதுமையும், அடுத்த பிறவியும் கெட்டு விடும். தேச பக்தர்களுடன் மோதும் எந்த ராவணனும் தப்பிக்க முடியாது. நாசமாகி விடுவார்கள்...’’ என்றார்.

Related Stories:

More
>