ஆப்கான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்: 37 பேர் உயிரிழப்பு; ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதலே ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஷியா பிரிவு முஸ்லிம்களையும், தலீபான்களையும் குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வாரங்களாக ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதிகளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. கடந்த 8-ந் தேதி குண்டூஸ் மாகாணத்தின் தலைநகர் குண்டூசில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 46 பேர் உயிரிழந்தனர். குண்டுவெடிப்பில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில் காந்தஹாரில் உள்ள மிகப்பெரிய மசூதியில் நேற்று அடுத்தடுத்து நடந்த தற்கொலைப்படை தாக்குதல் அந்த நாட்டை பெரும் அதிர்வுக்குள்ளாக்கியது. காந்தஹார் மாகாணத்தின் தலைநகர் காந்தஹாரில் உள்ள ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் நேற்று மதியம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த 500-க்கும் அதிகமான ஷியா பிரிவு முஸ்லிம்கள் இந்த தொழுகையில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் உடலில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்த பயங்கரவாதிகள் 2 பேர் மசூதியின் நுழைவாயிலில் நின்று குண்டுகளை வெடிக்க செய்தனர். இதனால் அப்பகுதியில் பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. அடுத்தடுத்து நடந்த இந்த தற்கொலைப்படை தாக்குதல்களில் 37 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என பாதுகாப்பு தரப்பில் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது என கூறப்படுகிறது.

Related Stories: