அடுத்த ஐபிஎல் டி20 சீசனில் சென்னை அணியின் கூல் கேப்டன் தல தோனி: ரசிகர்கள் உற்சாகம்...

துபாய்: கொல்கத்தா அணியுடனான பைனலில், 27 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சென்னை அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை முத்தமிட்டது. ஐபிஎல் டி20 தொடரின் 14வது சீசன் பைனல் துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீசியது. ருதுராஜ், டு பிளெஸ்ஸி இருவரும் சென்னை இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 61 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. ருதுராஜ் 32 ரன் (27 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த உத்தப்பா அதிரடியில் இறங்க, சிஎஸ்கே ஸ்கோர் வேகம் எடுத்தது. டு பிளெஸ்ஸி 35 பந்தில் அரை சதம் அடித்து அசத்தினார்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தனர். உத்தப்பா 31 ரன் (15 பந்து, 3 சிக்சர்) விளாசி வெளியேறினார். இதையடுத்து, டு பிளெஸ்ஸியுடன் மொயீன் இணைந்தார். டு பிளெஸ்ஸி 86 ரன் (59 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது. மொயீன் 37 ரன்னுடன் (20 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா பந்துவீச்சில் நரைன் 2, மாவி 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 193 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது.

கில் - வெங்கடேஷ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 10.3 ஓவரில் 91 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தது. வெங்கடேஷ் 50 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி தாகூர் வேகத்தில் ஜடேஜாவிடம் பிடிபட, அடுத்து வந்த ராணா சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். அதிரடி வீரர் சுனில் நரைன் 2 ரன் எடுத்த நிலையில், ஹேசல்வுட் வேகத்தில் சிக்சர் விளாச ஆசைப்பட்டு பவுண்டரி அருகே ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, சிஎஸ்கே கை ஓங்கியது. கில் 51 ரன் (43 பந்து, 6 பவுண்டரி) விளாசி தீபக் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார்.

அடுத்து வந்த கார்த்திக் (9 ரன்), ஷாகிப் ஹசன் (0) இருவரும் ஜடேஜா சுழலில் மூழ்கினர். திரிபாதி 2, கேப்டன் மோர்கன் 4, மாவி 20 ரன்னில் (13 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) வெளியேறினர். கொல்கத்தா அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. பெர்குசன் 18, வருண் 90) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை பந்துவீச்சில் தாகூர் 3, ஜடேஜா, ஹேசல்வுட் தலா 2, தீபக், பிராவோ தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 27 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற சூப்பர் கிங்ஸ் 4வது முறையாக ஐபிஎல் சாம்பியனாகி அசத்தியது.

* ருதுராஜுக்கு ஆரஞ்சு தொப்பி

ஐபிஎல் 14வது சீசனில் அதிக ரன் குவித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியை சிஎஸ்கே தொடக்க வீரர் ருதுராஜ் கெயிக்வாட் வசப்படுத்தினார். 13 போட்டியில் 626 ரன் குவித்து முதலிடத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுலை அவர் நேற்று முந்தினார். ருதுராஜ் 16 போட்டியில் 635 ரன்னுடன் முதலிடம் பிடித்தார்.

* டு பிளெஸ்ஸிக்கு ‘லைப்’

ஐபிஎல் தொடரில் தனது 100வது போட்டியில் நேற்று களமிறங்கிய சிஎஸ்கே தொடக்க வீரர் டு பிளெஸ்ஸி 2 ரன் மட்டுமே எடுத்திருந்தபோது ஷாகிப் பந்துவீச்சில் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை கேகேஆர் கீப்பர் கார்த்திக் நழுவவிட்டார். இதை நன்கு பயன்படுத்திக் கொண்ட அவர் 35 பந்தில் அதிரடியாக அரை சதம் அடித்து ஷிகர் தவானை (16 போட்டியில் 587 ரன்) பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு முன்னேறினார். அதிரடியை தொடர்ந்த டு பிளெஸ்ஸி, பஞ்சாப் கிங்சின் கே.எல்.ராகுலை 3வது இடத்துக்கு தள்ளினார். சிஎஸ்கே இன்னிங்சின் கடைசி பந்தில் 3 ரன் எடுத்தால் ருதுராஜையும் பின்னுக்குத் தள்ளி ஆரஞ்சு தொப்பியை அபகரிக்கும் வாய்ப்பு இருந்த நிலையில், விக்கெட்டை இழந்து 2வது இடத்துடன் திருப்தி அடைந்தார். ஐபிஎல் 14வது சீசன் ரன் குவிப்பில் முதலிடம் பிடிப்பது யார் என்பதில் நேற்று நிலவிய கண்ணாமூச்சி ஆட்டம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது.

* சென்னை அணி முதல் முறையாக ரெய்னா இல்லாமல் ஐபிஎல் பைனலில் களமிறங்கியது.

* கேகேஆர் அணிக்காக 3 ஐபிஎல் பைனலிலும் விளையாடிய வீரர்கள் என்ற பெருமை ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைனுக்கு கிடைத்துள்ளது.

* டி20 போட்டிகளில் கேப்டனாக, எம்.எஸ்.தோனி விளையாடும் 300வது போட்டி இது.

வெற்றியை தொடர்ந்து பேசிய சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறுகையில், சென்னை அணி பற்றி பேசுவதற்கு முன் கொல்கத்தா அணியைப் பற்றி பேச வேண்டும். இந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வெல்வதற்கு மிகவும் தகுதி வாய்ந்த அணி என்றால் அது கொல்கத்தா தான். அவர்களது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது என்று கூறினார். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் புதிதாக 2 அணிகள் அறிமுகமாக உள்ள நிலையில், பி.சி.சி.ஐ.யின் முடிவை பொறுத்து தனது ஐ.பி.எல். எதிர்காலம் அமையும் என தெரிவித்தார். சென்னை அணிக்காக விளையாடுவது என்பதை விட அணிக்கு எது சிறந்தது என பார்க்க வேண்டுமென தெரிவித்தார். சென்னை அணியில் நீங்கள் விட்டுச் சென்ற மரபு குறித்து பெருமைப்படுகிறீர்களா என கேள்வி எழுப்பியதற்கு, நான் இன்னும் சென்னை அணியை விட்டுச் செல்லவில்லை என்று சிரித்துக் கொண்டே கேப்டன் தோனி பதிலளித்தார். முன்னதாக, நேற்று நடந்த இறுதி போட்டியையும் சேர்த்து ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில், 300 ஆட்டங்களில் கேப்டன் பொறுப்பு வகித்த ஒரே வீரர் என்ற சிறப்புக்கு கேப்டன் தோனி சொந்தக்காரர் ஆனார்.

Related Stories: