வங்கதேசத்தில் பயங்கரம் துர்கா பூஜையில் வன்முறை 4 இந்துக்கள் சுட்டுக் கொலை: இந்தியா கடும் கண்டனம்

தாகா: வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட மதக்கலவரத்தில் 4 இந்துக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கலவர கும்பல் தாக்கி பலர் காயமடைந்தனர். சாமி சிலை அடித்து உடைக்கப்பட்டன. மேற்கு வங்கத்தில் விமரிசையாக கொண்டாடப்படும் துர்கா பூஜை, அம்மாநிலத்தை ஒட்டிய வங்கதேச நாட்டிலும் இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வங்கதேச தலைநகர் தாகா அடுத்த கொமில்லா நகரில் நேற்று முன்தினம் துர்கா பந்தல்கள் அமைத்து சாமி சிலைகள் வைத்து இந்துக்கள் விழாவை கொண்டாடினர். அப்போது, துர்கா பூஜை விழாவில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக புரளி கிளம்பியது.

இதையடுத்து, ஏராளமானோர் அங்கு குவிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்துக்கள் மீது கற்களை வீசி தாக்கினர். சாமி சிலைகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த வீடியோ காட்சிகள் பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. கொமில்லாவை அடுத்த ஹசிகன்ஜ், ஹதியா, பன்சகாலி ஆகிய பகுதிகளிலும் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்தது. கலவரம் நடந்த இடத்தில் போலீசாரும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். கலரவத்தை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த வன்முறையில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தொடர்ந்து 22 மாவட்டங்களில் துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு விவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘‘வங்கதேசத்தில் நிலைமையை கட்டுப்படுத்துவதை உறுதி செய்வதற்காக, சட்டம் ஒழுங்கை காக்க வங்கதேச அரசின் நடவடிக்கையை இந்தியா கவனித்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

வேட்டையாடப்படுவர் பிரதமர் ஹசீனா உறுதி

துர்கா பூஜை வன்முறை குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அளித்த பேட்டியில், ‘‘கொமில்லா வன்முறை விவகாரம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். யாரும் தப்பிக்க முடியாது. தவறு செய்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பதை பற்றி எல்லாம் கவலையில்லை. தவறு செய்தவர்கள் வேட்டையாடப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள். தொழில்நுட்ப உதவியுடன் பல தகவல்கள் கிடைத்துள்ளது. விரைவில் நியாயம் கிடைக்கும்’’ என உறுதி கூறி உள்ளார்.

Related Stories: