தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் உலகின் மிகப் பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே லட்சியம்: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: ``தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டை உலகின் மிகப் பெரிய ராணுவ சக்தியாக உருவாக்குவதே லட்சியம்,’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாட்டின் ராணுவ தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பு நிலையை மேம்படுத்தும் வகையில், 41 ஆயுத தொழிற்சாலைகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் 7 பாதுகாப்பு நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த 7 பாதுகாப்பு நிறுவனங்களை காணொலி மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் பல முக்கிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் பாதுகாப்பு துறையில் அதிக வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஏற்பட்டுள்ளது.  

தற்போது, ஒற்றை சாளர அமைப்பு பின்பற்றப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும், தேங்கிய கொள்கைளினால் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.  ‘தற்சார்பு இந்தியா’ கொள்கையின் கீழ், இந்தியாவை உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக மாற்றுவதையும், நவீன ராணுவ தொழிற்சாலைகளை உருவாக்கி மேம்படுத்துவதுமே, நாட்டின் குறிக்கோளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் இந்த தீர்மானத்தையும், மேக் இன் இந்தியா’ என்ற தாரக மந்திரத்தையும் நோக்கி தேசம் சென்று கொண்டிருக்கிறது. புதிய எதிர்காலத்திற்காக இந்தியா உறுதிபூண்டுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது, நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வருகின்றன. இந்த 7 நிறுவனங்களும் அவற்றின் பணி காலத்தில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  ஏனென்றால், ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அதன் ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகளை கொண்டே அடையாளம் காணப்படுகிறது. எதிர்கால தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்க ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

அரசியல் பின்புலம் இல்லாதவன்

அவர் மேலும் கூறுகையில், ``நான் சாதாரண பின்னணியில் இருந்து வந்தவன். எந்தவொரு அரசியல் பின்புலம், வாரிசாகவோ அல்லது சாதி அடிப்படையிலான ஆதரவுடனோ அரசியலுக்கு வரவில்லை. மக்கள் வாய்ப்பு வழங்கியதால் கடந்த 2001ம் ஆண்டு குஜராத்தில் தொடங்கிய எனது அரசியல் பணி, 20 ஆண்டுகளாக, தற்போது வரை தொடர்கிறது. மக்களின் ஆசிர்வாதத்தால் முதலில் குஜராத் மக்களுக்கும் தற்போது நாட்டிற்கும் சேவையாற்றி வருகிறேன்,’’ என்றார்.

Related Stories: