நத்தம் அருகே கோயில் திருவிழாவில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி

நத்தம் : நத்தம் அருகே கோயில் திருவிழாவில் மாடுகள் மாலை தாண்டும் நிகழ்ச்சியை காண ஏராளமானோர் குவிந்தனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே செந்துறை பெரியூர்பட்டியில் மந்தையம்மன் கருத்தநாயக்கர் மந்தை கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோயில் திருவிழா 8 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் கடந்த அக். 5ம் தேதி காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

நேற்று முன்தினம் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்கள் வளர்க்கும் சாமி மாடுகள் கலந்து கொண்டன. முன்னதாக இந்த மாடுகளை கோயில் முன்பு நிறுத்தி வைத்து முறைப்படி விசேஷ பூஜைகள் செய்தனர். பின்னர் பக்தர்கள் காலணியின்றி, கரடு முரடான பாதைகளில் சுமார் 1 கிமீ தூரம் மாடுகளுடன் ஓடி வந்து, கோயில் முன் போட்டிருந்த வெள்ளை துணியை மாடுகளை தாண்ட செய்தனர்.

தொடர்ந்து விழாவில் பங்கேற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: