விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி சுயேட்சைகள் அபார வெற்றி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சில ஒன்றியங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு சுயேட்சைகள் அபார வெற்றி பெற்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஒன்றிய கவுன்சிலர், 688 ஊராட்சி மன்றத்தலைவர், 5,088 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த 6, 9ம் தேதிகளில் 2 கட்டமாக நடந்து முடிந்து, நேற்றுமுன்தினம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. 22 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 369 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலில், 201 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களை திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விசிக 10 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், அதிமுக 44 இடங்களையும் பிடித்தது.

பல ஒன்றியங்களில் அதிமுகவை பின்னுக்குத்தள்ளி சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். காணை ஊராட்சி ஒன்றியத்தில் 17 இடங்களில் திமுகவும், விசிக, காங்கிரஸ், பாமக, அதிமுக ஆகியவை தலா ஒரு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 பேர் வெற்றிபெற்று, அதிமுகவை பின்னுக்குத்தள்ளியுள்ளனர். அதேபோல், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 19 இடங்களை திமுகவும், ஒரு இடத்தை காங்கிரசும் கைப்பற்றியது. அந்ததொகுதி அதிமுக ஒன்றிய செயலாளர் ராமதாஸ் படுதோல்வி அடைந்தார். மேலும், 18 வது வார்டு அதிமுக வேட்பாளர் சக்திவேல் டெபாசிட் இழந்தார். அந்த ஒன்றியத்தில் சுயேட்சை வேட்பாளர் அபார வெற்றிபெற்றார்.

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 21 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது, அதிமுக ஒரு இடத்தை மட்டுமே பிடித்தது. அவர்களுக்கு நிகராக சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றார். அதிமுக எம்எல்ஏவின் தொகுதியான வானூரில் திமுக கூட்டணி 12 இடங்களையும், பாமக 2 இடங்களையும் கைப்பற்றியது. சுயேட்சை வேட்பாளர் 2 இடங்களில் வெற்றிபெற்றார். மரக்காணத்தில் 18 இடங்களை திமுக கூட்டணியும், பாமக 2 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும் வெற்றிபெற்றது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் வெற்றிபெற்றனர்.

அதேபோல், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 1 சுயேட்சையும், செஞ்சியில் 2 சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றிபெற்றனர். பாமக எம்எல்ஏவின் தொகுதியான மயிலத்தில் 16 இடங்களை திமுகவும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றிபெற்றது. அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 4 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இங்கு பாமக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. ஒலக்கூர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 இடங்களில் 7 திமுகவும், 2 பாமகவும், 3 அதிமுகவும் வெற்றி பெற்றது. இங்கு அதிமுகவை பின்னுக்குத்தள்ளி 4 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றனர்.

பாஜ டெபாசிட் இழப்பு: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக 23 ஒன்றிய கவுன்சிலர், 3 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 26 இடங்களில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்தது. 2 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் டெபாசிட் இழந்தது. தனித்து போட்டியிட்ட தேமுதிகவும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தென்காசி மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 106 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிமுக 13 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால், சுயேட்சைகள் 25 இடங்களை கைப்பற்றியுள்ளனர்.

Related Stories: