போலி ஆவணங்களை தயாரித்து முறைகேடு விவகாரம் விஏஓ மீது நடவடிக்கை கோரி வழக்கு: லஞ்ச ஒழிப்பு துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கொடைக்கானல் தாலுகா பூலத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏ.ஆர்.கோகுலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில், கொடைக்கானலில் வனத்துறைக்கு சொந்தமான 1 ஏக்கர் 85 சென்ட் நிலத்தை மத்திய அரசு அதிகாரியாக பதவி வகித்த ஆர்.அம்பலவாணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அந்த நிலத்தை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைக்குமாறும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2013ல் வருவாய் துறைக்கும், வனத்துறைக்கும் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட வனத்துறையின் நிலம் வருவாய்துறையால் மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து கொடைக்கானல் ஆர்டிஓ விசாரணை நடத்தியபோது ஏராளமான போலி ஆவணங்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஆக்கிரமிப்பு செய்த அம்பலவாணனை காப்பாற்றுவதற்காக பூலத்தூர் விஏஓவாக பணியாற்றிய சரவணன், கிராம உதவியாளர் சிவக்குமார் மற்றும் சிலர் நீதிமன்றத்திற்கு தவறான தகவல்களை தந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடம் பாண்டியன் என்பவர் பெயரில் உள்ளது என்று அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர்டிஓவிடம் கடந்த 2025 ஏப்ரல் 4ம் தேதி புகார் கொடுத்தேன். அதுமட்டுமல்லாமல் என் மீதும் பல பொய் புகார்கள் கொடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட விஏஓ ஏராளமான சொத்துகளை சேர்த்துள்ளார். அவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் தனது மனைவி பெயரில் சொத்துகளை வாங்கியுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, போலி ஆவணங்களையும், போலி வில்லங்க சான்றுகளையும் தயாரித்து முறைகேட்டில் ஈடுபட்ட பூலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கொடைக்கானல் ஊழல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.மகேஸ்வரன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அரசு தரப்பில் பதில்தருமாறு உத்தரவிட்டு வரும் 30ம் ேததிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Related Stories: