சென்னை: போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் கிடு கிடுவென உயர தொடங்கியுள்ளது. சன்பிளவர், பாமாயில் லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தொடர் தாக்குல் நடத்தி வருகிறது. ஈரானும் தன்னுடைய தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான், தனது நாட்டை சுற்றியுள்ள சவூதிஅரேபியா, ஈராக், ஐக்கிய அரசு அமீரகம், அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ ஏவுதளங்கள், முகாம்கள் மீதும் தாக்குதலை நடத்தி வருகிறது.
தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஈரான் நிர்வகித்து வரும் ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் 20 சதவீத கச்சா எண்ணெய் செல்கிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான போர் பதற்றத்தால் இந்த நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதன் காரணமாக, கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. மேலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. சமையல் காஸ் விநியோகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 60 ரூபாயும், வணிக பயன்பட்டிற்கான சிலிண்டரின் விலை 115 ரூபாயையும் ஒன்றிய அரசு அதிகரித்தது. இது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டதால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. இதன் காரணமாக வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை தங்கு தடையின்றி கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வீட்டு சிலிண்டர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால் வர்த்தக சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தமிழகத்தில் ஓட்டல் தொழில் என்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய டீக்கடை முதல் பெரிய ஓட்டல்கள் வரை இந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. சிலிண்டர் சப்ளை இல்லாததால் ஓட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பு என்பது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இயங்கும் நேரமும் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் இடையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி வேறு பரவி வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசலை அதிக அளவில் வாங்கி இருப்பு வைக்க தொடங்கினர்.
இதனால் பங்குகளில் வழக்கத்தை விட இரட்டி விற்பனை நடைபெற்று, பங்குகள் உடனுக்குடன் மூடப்படும் அபாய நிலை ஏற்பட்டது. தட்டுப்பாடு வராது என்று சொன்ன பிறகே வாகன ஓட்டிகள் பங்குகளை நோக்கி படையெடுப்பதை கொஞ்சம், கொஞ்சமாக நிறுத்தியுள்ளனர். தற்போது வழக்கம் போல பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சி அரங்கேறி மக்களை மீண்டும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. அதாவது போர் சூழல் காரணமாக சமையல் எண்ணெய் விலையும் ‘கிடுகிடு’வென உயர தொடங்கியுள்ளது.
குறிப்பாக வீட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தக் கூடிய சூரிய காந்தி எண்ணெய் (சன்பிளவர் ஆயில்) முன்பு ஒரு லிட்டர் ரூ.155க்கு விற்கப்பட்டது. இது தற்போது ரூ.170-க்கு விற்கப்படுகிறது. சில்லரை கடைகளில் இதன் விலை ரூ.175 வரை விற்கப்படுகிறது. இதேபோல், பாமாயில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஒரு லிட்டர் ரூ.110-க்கு விற்கப்பட்து. இது தற்போது ரூ.122 வரை மொத்த விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் இதைவிட லிட்டருக்கு ரூ.5 முதல் ரூ.6 வரை அதிகரித்து விற்கப்படுகிறது. அந்த வகையில் சன்பிளவர் மற்றும் பாமாயில் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கடந்த 2 வாரத்தில் மட்டும் உயர்ந்துள்ளது.
இதுதவிர, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றின் விலையும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தப்பட்டு விற்கப்படுகிறது. ஏற்கனவே விலை உயர்வால் கடும் அதிர்ச்சியில் இருந்து வரும் மக்களுக்கு தற்போது சமையல் செய்ய பயன்படுத்தப்படும் எண்ணெயும் உயர்ந்துள்ளது அவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினரின் மாதாந்திர பட்ஜெட்டை நிலைகுலைய செய்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு இந்த விலையேற்றம் என்பது தாங்கி கொள்ள முடியாததாக ஒன்றாக மாறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தனது சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது.. சூரியகாந்தி எண்ணெய் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்தும், பாமாயில் இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் இருந்தும், சோயா எண்ணெய் அர்ஜென்டினா போன்ற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன.. போர் சூழலால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, காப்பீட்டுத் தொகை மற்றும் சரக்குக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், உள்நாட்டுச் சந்தையில் கடந்த சில நாட்களில் மட்டும் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக சன்பிளவர் எண்ணெய் மற்றும் பாமாயில் விலையில் இந்த அதிரடி மாற்றம் காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
