திருப்பதி கோயிலில் இன்று பிரம்மோற்சவ 7ம் நாள்: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் அருள்பாலித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி நாள்தோறும் காலை, இரவு என பல்வேறு வாகனங்களின் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான நேற்று மாலை தங்க தேரோட்டத்திற்கு மாற்றாக சர்வபூபால வாகனத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி அருள்பாலித்தனர்.

இரவு உற்சவத்தில் மலையப்பசுவாமி கஜ வாகனத்தில் எழுந்தருளினார். 7ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி சூரிய பிரபை வாகனத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் திவ்ய பிரபந்தம் மற்றும் பாராயணம் பாடி சிறப்பு பூஜைகள் செய்தனர். இன்றிரவு உற்சவத்தில் சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலிக்கவுள்ளார். 8ம் நாளான நாளை காலை தேரோட்டத்திற்கு பதிலாக சர்வபூபால வாகனத்தில் தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி எழுந்தருள்கிறார். மாலையில் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாளை மறுநாள் காலை தீர்த்தவாரி கோயிலில் உள்ள ஐயன மண்டபத்தில் பக்தர்களின்றி நடைபெறும். மாலை கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Related Stories: