போலி ஆவணம் தயாரித்து நில மோசடி அதிமுக மாஜி கவுன்சிலர் உள்பட 2 பேர் கைது: நீதிமன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை

திருவொற்றியூர்: தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்ற வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர், வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் உத்தண்டராமன் (54), தேமுதிக மாவட்ட துணை செயலாளர். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், திருவொற்றியூர் காமராஜ் நகரில் 85 சென்ட் இடத்தை, திருவொற்றியூர் பழைய கிணறு தெருவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், அதிமுக வட்ட செயலாளருமான டோக்கியோ ஆர்.வி.மணி (78) மற்றும் திருவொற்றியூர் ராமசாமி நகர், 3வது தெருவை சேர்ந்த முத்தையா (65) ஆகியோரிடம் வாங்க முடிவு செய்தார்.

இந்த நிலத்திற்கு ரூ.1.5 கோடி விலை பேசி, முன் பணமாக ரூ.22.5 லட்சம் கொடுத்து, திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்த பத்திரம் பதிவு செய்துள்ளார். இதனிடையே, மேற்கண்ட நிலம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அதிமுக பிரமுகர் டோக்கியோ ஆர்.வி.மணி, முத்தையா ஆகிய இருவரும் போலி ஆவணம் தயாரித்து, அந்த நிலம் தங்களுடையது எனக்கூறி, பண மோசடி செய்தது தெரிந்தது. இதுபற்றி டோக்கியோ ஆர்.வி.மணி, முத்தையா ஆகியோரிடம் கேட்டபோது, சரிவர பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. எனவே, தனது பணத்தை திருப்பி தரும்படி உத்தண்டராமன் கேட்டுள்ளார்.

ஆனால், பணத்தை திருப்பி தர மறுத்ததோடு, இருவரும் சேர்ந்து உத்தண்டராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, அவர் திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆர்.வி.மணி, முத்தையா ஆகியோர் மீது வழக்கு பதிய போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், திருவொற்றியூர் போலீசார் 3 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு டோக்கியோ ஆர்.வி.மணி, முத்தையா ஆகிய இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். போலி நில ஆவணம் மூலம் பண மோசடி வழக்கில் முன்னாள் கவுன்சிலர் கைது ஆகி இருப்பது திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: