திருப்பதி கோயிலில் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் பூந்தி மையம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 6 லட்சம் லட்டுகள் தயாரிக்கும் வகையில் பூந்தி மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் இன்று திறந்து வைத்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2008ம் ஆண்டு வரை பக்தர்களுக்கு வழங்க தினமும் 45 ஆயிரம் லட்டுகளை தேவஸ்தானம் தயார் செய்து வந்தது. ஆனால் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் லட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக அப்போதைய முதல்வர் ராஜசேகரரெட்டி பூந்தி தயாரிக்கும் மையத்தை திறந்து வைத்தார்.

இதன் மூலம் சுமார் 3.75 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த மையத்தில் எரிவாயு அடுப்புகளில் இருந்து வரும் அதிக வெப்பம் காரணமாக, தொழிலாளர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மேலும் அவ்வப்போது தீ விபத்தும் ஏற்பட்டது. இதனால் லட்டு உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவீன உபகரணங்கள், காற்றோட்டமான வசதிகளுடன் கூடிய புதிய பூந்தி தயாரிக்கும் மையம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக தனியார் சிமெண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய ரூ.12 கோடி நன்கொடை மூலம் 8,541 அடியில் புதிய பூந்தி தயாரிக்கும் மையம் கட்டப்பட்டது. இதில் 40 வெப்ப திரவ அடுப்புகள் வெப்பம் இல்லாத வகையில் அமைக்கப்பட்டது. இந்த மையத்தை முதல்வர் ஜெகன்மோகன் இன்று திறந்து வைத்து பூந்தி தயாரிக்கும் பணியை துவக்கி வைத்தார். இதில் நன்கொடையாளர் என்.சீனிவாசன், அறங்காவலர் குழுதலைவர் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி ஜவகர், கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி, முதன்மை பொறியாளர் நாகேஸ்வரராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த முதல்வர் ஜெகன்மோகன், தனது எடைக்கு நிகராக 78 கிலோ அரிசியை துலாபாரம் செய்து காணிக்கை செலுத்தினார்.

பின்னர் ஏழுமலையான் கோயில் எதிரே ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி தொலைக்காட்சி கன்னட மற்றும் இந்தி ஒளிபரப்பை முதல்வர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார்.

உண்டியல் காணிக்கை ரூ2.45 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்ச விழாவின் 5ம் நாளான நேற்று காலை முதல் இரவுவரை 20,850 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 10,424 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் ரூ2.45 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

Related Stories: